கொரோனா வீரியம்... கவலை கொள்ளும் பினராயி விஜயன்!

கொரோனா பாதிப்பு நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் உச்சம் தொட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக, ஓணம் பண்டிகை பின்பு தான் தினமும் பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. தினமும் அங்கு 7 ஆயிரம், 8 ஆயிரம் என பாதிப்பின் எண்ணிக்கை இருந்து வருகிறது. கேரளாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7, 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தொற்று பாதிப்புடன் 93,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது அம்மாநில மக்களை கவலை கொள்ள செய்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ``கேரளத்தில் கொரோனா தொற்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. காட்டுத்தீ முதலில் அணைந்து விட்டது போல இருக்கும். ஆனால், திடீரெனெ மீண்டும் தீ கொழுந்து விட்டு எரியும். அதுபோலதான் இப்போது, கொரோனாவும் வீரியம் கொண்டு செயல்படுகிறது. இதனால் மாநிலத்தில் எந்த தளர்வுகளும் இருக்காது. மிகுந்த எச்சரிக்கையுடன் இப்போதைய சூழ்நிலையை அணுக வேண்டும்.

கொரோனா பாதிப்பு ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் மக்கள் சிலர் செயல்படுகின்றனர். இந்த வகையான எண்ணம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கொரோனா குணம் அடைந்த பிறகும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை புறந்தள்ளிவிட முடியாது" என கூறியுள்ளார்.

More News >>