`மிகக் கோரமான 24 மணி நேரம்!- கதறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடிய டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள், பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது.
இந்த விஷயம் சர்வதேச அளவில் பூதாகரமாகியுள்ள நிலையில், புதிதாக கேப்டன் பொறுப்பேற்றிருக்கும் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன், `எங்கள் அணிக்கு கடைசி 24 மணி நேரம் மிகக் கோரமானதாக இருக்கிறது’ என்று வெளிப்படையாக கதறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, மூன்றாவது போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் உணவு இடைவேளையின் போது சில வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
அதில், ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்தியது ஆதாரபூர்வமாக தெரிந்தது. இதை நிருபர்களைச் சந்தித்த கேப்டன் ஸ்மித்தும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் அவர்கள் வகித்து வந்த பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டனர். இதையடுத்து, அணியின் விக்கெட் கீப்பரான டிம் பெய்ன் இடைக்கால கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தோய்வடைந்த மனநிலை, புதிய தலைமை, குழுப்பமான சூழல் என பல்வேறு விஷயங்கள் தாக்கம் செலுத்த ஆஸ்திரேலியா, நான்காவது நாளான இன்று டெஸ்ட் போட்டியை 322 ரன்கள் வித்தியாசத்தில் பறிதாபமாக இழந்தது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பெய்ன், `எங்கள் அணியில் தற்போது ஏகப்பட்ட குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக, சொந்த நாட்டிலிருந்து நடந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு வருவது எங்களை வெகுவாக பாதித்துள்ளது. இருப்பினும் இந்த டெஸ்ட் போட்டியை இப்படி இழந்திருக்க கூடாது. கடந்த 24 மணி நேரமும் எங்கள் அணிக்கு மிகக் கோரமானதாகவே இருந்தது’ என்று நொந்து கொண்டார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com