நூறு கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டால் செய்துள்ள செயலி எது தெரியுமா?
கூகுள் நிறுவனத்தின் கூகுள் டாக்ஸ் செயலி இதுவரை 100 கோடிக்கும் அதிகமான முறை பிளே ஸ்டோர் மூலம் நிறுவப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கூகுள் பயனர் கணக்குடனும் கூகுள் டாக்ஸ் என்னும் ஆண்ட்ராய்டு செயலி கட்டணமின்றி கிடைக்கிறது. இந்தச் செயலி 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு 2018 அக்டோபர் மாதம் வரை 50 கோடி பயனர்கள் இதை தரவிறக்கம் செய்திருந்தனர்.
தற்போது கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அநேகர் வீட்டிலிருந்து பணி செய்வதாலும், கல்வி செயல்பாடுகளாலும் தற்போது வரை மேலும் 50 கோடி பேர் இதை பயன்படுத்துகின்றனர்.
ஜி சூட் (G Suite) என்பது கூகுள் வொர்க்ஸ்பேஸ் (Google Workspace) என்று மாற்றப்பட்ட பிறகு 'Mentions' என்ற புதிய அம்சமும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர், இன்னொரு பயனரை கூகுள் டாக்ஸ் செயலியிலேயே குறிப்பிட (mention) முடியும். இன்னொரு பயனரை mention செய்வதற்கு @ என்ற குறியை பயன்படுத்தி தொடர்பு பட்டியலிலிருந்து ஒருவரையோ, பலரையோ தேர்ந்தெடுக்கலாம்.