கோவில் நடை முன் வந்த முதலை... பூசாரியின் பிரார்த்தனையைக் கேட்ட பின்னர் திரும்பியது...!
காலையில் கோவிலைத் திறந்தபோது நடை முன் வந்து நின்ற முதலையைப் பார்த்து பூசாரி கடும் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவரது பிரார்த்தனையைக் கேட்ட பின்னர் அந்த முதலை அமைதியாகத் திரும்பிச் சென்றது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது கும்பளா என்ற கிராமம். இது கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும்.
இங்குப் பிரசித்தி பெற்ற அனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் மூல கோவிலாகக் கருதப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் கோவில் குளத்தில் 70 வருடங்களுக்கு மேலாக ஒரு சைவ முதலை உள்ளது. அந்தக் குளத்தில் முதலை எப்படி வந்தது என்று யாருக்குமே தெரியாது.
வழக்கமாக முதலைகள் அசைவ உணவுகளைத் தான் சாப்பிடும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முதலை கோவில் பூசாரி கொடுக்கும் பிரசாத சாதத்தை மட்டுமே சாப்பிடும்.தினமும் காலையிலும், மதியமும் பூஜைகளை முடித்த பின்னர் பிரசாத அரிசி சாதத்தைக் குளத்திற்கு அருகே பூசாரி கொண்டு செல்வார். இந்த முதலைக்கு பபியா என்பது தான் பெயர். பபியா என்று பூசாரி அழைத்தவுடன் அந்த முதலை தண்ணீருக்குள் இருந்து வேகமாக எழுந்து வரும். அந்த சாதத்தைப் பூசாரியின் கையிலிருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு உடனடியாக குளத்திற்குள் சென்றுவிடும். அந்தக் குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த மீன்கள் எதையும் இந்த முதலை தொந்தரவு செய்வதில்லை என்பது தான் நம்ப முடியாத விஷயம்.
தினமும் இரவில் கோவில் நடை சாத்தப்படும் வரை இந்த முதலை குளத்துக்குள் தான் கிடக்கும். நடை சாத்தப்பட்ட உடன் குளத்தில் இருந்து மேலே ஏறி வந்து படுத்துக்கொள்ளும். வேறு எங்கும் செல்லாது.அதிகாலையில் கோவில் நடை திறக்கும் சத்தம் கேட்டவுடன் அந்த முதலை மீண்டும் குளத்திற்குள் சென்று விடும். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கோவில் முக்கிய பூசாரி நடை திறந்தபோது அந்த முதலை, நடைக்கு அருகே படுத்துக் கிடந்தது. இதைப் பார்த்த பூசாரி அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் பழக்கப்பட்ட முதலை என்பதால் வழக்கமான விஷ்ணு சுக்கிரம் மற்றும் புருஷ சுக்ரம் பிரார்த்தனையைச் செய்தார்.
இதைக் கேட்ட பின்னர் அந்த முதலை வழக்கம்போல குளத்திற்குச் சென்று விட்டது. கோவில் நடை அருகே முதலை படுத்திருப்பதைக் கோவில் பூசாரி ஒருவர் போட்டோ எடுத்து சமூக இணையதளங்களில் பகிர்ந்தார். அந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.