சென்னையின் கடைசி வாய்ப்பையும் தட்டி பறித்த மும்பை அணி!
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (23-10-2020) போட்டியில் மும்பை அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது மும்பை அணி.
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ஆடவில்லை அவருக்குப் பதிலாகப் பொறுப்பு கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டார். சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நேற்றைய போட்டியைத் தொடங்கியது. பல விமர்சனங்களுக்குப் பின் சென்னை அணியில் வாட்சன் மற்றும் ஜாதவ் நீக்கப்பட்டு மாற்றுவீரர்களாக கெய்க்வாட் மற்றும் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பிளசில் மற்றும் கெய்க்வாட் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். மும்பை அணி சார்பில் முதல் ஓவரை ட்ரன்ட் போல்ட் வீசினார். அவரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத கெய்க்வாட் முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார்.
சென்னை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான பிளசில்(1), ராயுடு(2) மற்றும் ஜெகதீசன்(0) ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறியது, சென்னை ரசிகர்களை மிகவும் சோதனைக்குள்ளாக்கியது.
இந்த போட்டியிலாவது ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியின் கேப்டன் தோனி இந்த முறையும் சோர்ந்து போகவில்லை. தோல்வியைக் கூட பெரிதாகக் கருதாத ரசிகர்கள், பழைய தோனியின் ஆட்டத்தை இந்த சீசனில் காண முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்களின் இடம் உள்ளது.
சென்னை அணியில் சாம் கரணை தவிர வேறு யாரும் சிறப்பாகச் செயல்படவில்லை. ஓப்பனிங் , மிடில் ஆர்டர், பந்து வீச்சு என அனைத்திலும் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார் சாம் கரண்.
மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரன்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் ராகுல் சஹர் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு பலம் சேர்த்தனர். சென்னை அணி இருபது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை சேர்த்தது. இது சென்னை அணியின் இந்த சீசனின் குறைந்தபட்ச ரன் ஆகும்.
மும்பை அணிக்கு ஓவருக்கு 5.7 ரன்ரேட் தேவைப்பட்டது. இருபது ஓவரில் 115 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை அணி.பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி, பந்து வீச்சில் மிரட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் எங்களுக்கு பிளே ஆஃப் சுற்றே வேண்டாம் என்ற நிலையிலேயே விளையாடினர் சென்னை வீரர்கள்.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் இல்லாததால், ஓப்பனிங் செய்ய அவருக்குப் பதில் டி-காக் உடன் இஷான் கிஷான் இணைந்தார்.டி-காக் மற்றும் இஷான் கிஷான் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். சென்னையின் அணியின் பந்து வீச்சைத் தெறிக்கவிட்டனர் இருவரும். இந்த இணையைப் பிரிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்றது சென்னை அணி.
அதிரடியாக விளையாடிய இருவரும் 12.2 வது ஓவரிலேயே இலக்கை எட்டி அணியை வெற்றி பெறச் செய்தனர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 37 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 68 ரன்களை சேர்த்துப் பிரமிக்க வைத்தார். இது மும்பை அணிக்குப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும்.மறுபுறம் விளையாடிய டி-காக் 46 ரன்களை விளாசி களத்தில் இருந்தார்.
மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணிக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்தது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியுற்ற மும்பை, சென்னையின் பிளே ஆஃப் கனவை நொறுக்கித்தள்ளியது.
பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட பொல்லார்ட் நேற்று சிறப்பான கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்தினார். மும்பை அணி சார்பில் பந்து வீசிய போல்ட் (4-1-18-4) 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது மும்பை அணி.