பணம் தரும் மரம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு!
வங்கியில் மரங்களை அடகு வைத்து வட்டியில்லாக் கடன் விவசாயிகள் பெறலாம் என்று கேரள கிராமத்தில் அமலில் உள்ள தனித்துவ திட்டம்.விவசாயிகள் வட்டியில்லா வங்கிக் கடன் பெறுவதற்கு தங்கள் நிலத்தில் உள்ள மரங்களை அடகுவைக்க அனுமதிக்கும் தனித்துவமான திட்டம் கேரள கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
மரக்கன்று நடுதல் மற்றும் அதனைப் பாதுகாத்தலை ஊக்குவிக்கவும் இதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.கேரள நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் இசாக்கின் சிந்தனையில் உதித்த இந்த திட்டம், வயநாடு மாவட்டத்தில் உள்ள மீனங்காடி ஊராட்சியில் இந்த வாரத் தொடக்கத்தில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
பசுமைப் பரப்பை அதிகரித்தும், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தும் நாட்டின் முதல்'கார்பன் நியூட்ரல்' ( வெளியேற்றப்படும் கார்பனும் உறிஞ்சப்படும் கார்பனும் சமநிலையில் இருத்தல்)பஞ்சாயத்தாக மாறுவதற்கு மீனங்காடி முயற்சி மேற்கொண்டுள்ள தாக இதற்கு முன் கடந்த 2018 பிப்ரவரியில் செய்தி வெளியானது.முழு அரசு ஆதரவுடனான இந்த திட்டம் மீனங்காடியில் கடந்த 2016-ல் தாமஸ் இசாக்கால் தொடங்கப்பட்டது. பாரிஸ் பருவநிலை மாநாட்டில் தாமஸ் இசாக் கலந்து கொண்டு திரும்பிய சிலமாதங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் குறித்து மீனங்காடி ஊராட்சி மன்றத் தலைவர் பீணா விஜயன் கூறும்போது, ஒவ்வொரு மரக்கன்றையும் ஆண்டுக்கு ரூ.50என்ற அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு அடகு வைக்கலாம். ஒரு விவசாயி தனது நிலத்தில் உள்ள 100 மரக்கன்றுகளை அடகு வைத்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.5000 என 10 ஆண்டுகளுக்குக் கூட்டுறவு வங்கிக் கடன் கிடைக்கும்.
வட்டியைப் பஞ்சாயத்து செலுத்தி விடும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மரத்தை வெட்டுவது என விவசாயி முடிவு செய்தால் கடன் தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டும். வெட்டுவதில்லை என முடிவு செய்தால் கடன் தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டாம்.
இத்திட்டத்துக்காக மீனங்காடி கூட்டுறவு வங்கியில் மூலதன நிதியாக மாநில அரசு ரூ.10 கோடி செலுத்தியுள்ளது. இதன் வட்டியிலிருந்து கிடைக்கும் தொகை மூலம் விவசாயிகளுக்கு 'மர வங்கி' திட்டத்தின் கீழ் கடன் கொடுக்கப்படுகிறது. இதுவரை 2 வார்டுகளில் உள்ள 184 விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மரக்கன்று உற்பத்தி செய்யும் நர்சரி ஒன்றை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி பராமரித்து வருகிறது. இதன் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் தனியார் தோட்டங்களில் 1.57 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக நடப்பட்டுள்ளன' என்றார்.