தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் ஆரம்பம்.. தகுதி நீக்கம் செய்ய தேர்தல் அதிகாரியிடம் மனு..
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி நடக்கிறது. இதில் டைரக்டர் டி.ராஜேந்தர், என்.ராமசாமி என்கிற முரளி ராம நாராயணன் தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இவர்கள் தலைமையில் இரண்டு அணி மோதுகிறது.
நேற்று மனு தாக்கல் செய்தவர்களின் 3 மனுக்களை ஏற்க்கக்கூடது என்று தேர்தல் அதிகாரி நீதியரசர் ஜெயசந்திரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஆர்.சிங்கார வடிவேலன், (மதுக்கூர் மூவி மேக்கர்ஸ்) நீதியரசர் ஜெயச்சந்திரமிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 1975 ஆம் ஆண்டின் கீழ் பதிவு செய்யப்பட்டது என்பது தாங்கள் அறிந்ததே. நமது சங்கத்தின் விதிமுறைகள் அனைத்தும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975க்கு உட்பட்டது. தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 விதி எண் 58ன் படி, சங்கத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு கொடுக்கப்படுமேயானால், அந்த அறிவிப்பு அன்றைய தேதியிலிருந்தே அமலுக்கு வந்து விடுகிறது. அதன்படி தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தலையும், தேர்தலுக்கான அட்டவணையையும் கடந்த 09-10-2020 தேதியிலும், தேர்தல் விதிகளை 15-10-2020 அன்றும் வெளியிட்டீர்கள். 15-10-2020 அன்று உங்களால் வெளியிடப்பட்ட விதிமுறை களில், விதி எண் 2ல் " சங்க விதிமுறை எண் 13 ன் படி கடந்த 5 ஆண்டுகளுக்குள் நேரடி தமிழ்படம் தயாரித்து, வெளியிட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்கள், பொருளாளர் ஆகிய நிர்வாகக்குழு பதவிகளுக்கு போட்டியிடும் உரிமை உண்டு " என குறிப்பிட்டுள்ளீர்கள்.
அதன்படி 15-10-2015 முதல் 14-10-2020 வரை உள்ளடக்கிய ஐந்து ஆண்டு காலத்திற்குள் ஒரு தயாரிப்பாளர் படத்தை தயாரித்து அதனை வெளியிட்டிருந்தால் மட்டுமே நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிட முடியும். இந்த விதிகள் மற்றும் உங்கள் அறிவிப்பின்படி 09-10-2020 முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்து விடுவதாலும், 15-10-2020 அன்று நீங்கள் வெளியிட்ட விதிகளின் படி, 14-10-2020க்கு பிறகு படத்தை திரையிட்டவர்கள் நிர்வாகக்குழு பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை தானாகவே இழந்து விடுகிறார்கள். இந்நிலையில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதா கிருஷ்ணன், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தங்களது படங்களை 14-10-2020 தேதிக்கு பிறகு வெளியிட்டிருப்பதால் இந்த 2020-2022 ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் தகுதியை தானாகவே இழக்கிறார்கள்.
எனவே தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975ன் விதிகளின் படியும், உங்களால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிகளின் படியும் மேற்கண்ட மூன்று நபர்களின் வேட்பு மனுக்களையும் நிராகரிக்கும் படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் கூறி உள்ளார்.