பீகாரைத் தவிர மற்ற மாநிலங்கள் பாகிஸ்தான் அல்ல.. சிவசேனா காட்டம்..
பாஜக தேர்தல் அறிக்கையில் பீகார் மக்களுக்கு இலவச தடுப்பூசி என்று அறிவித்துள்ளதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரைத் தவிர மற்ற மாநிலங்கள் எல்லாம் பாகிஸ்தான் அல்ல என்று அக்கட்சி பாஜகவை விமர்சித்துள்ளது.பீகாரில் அக்.28, நவ.3 மற்றும் நவ.7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணியில் இருந்து, ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி விலகி, தனியாகப் போட்டியிடுகிறது. அதை எதிர்த்து, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் இலவசமாகத் தடுப்பூசி போட வேண்டிய மத்திய அரசு, பீகாரில் ஆட்சிக்கு வந்தால்தான் இலவச தடுப்பூசி என்பதா? என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கொதித்தனர்.
இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பாஜகவைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், பீகாரில் பாஜக வென்றால் இலவச தடுப்பூசி என்பது மிகவும் மட்டமான அரசியல். இந்த அளவுக்கு பாஜக தரம் தாழ்ந்து போகும் என்று எதிர்பார்க்கவில்லை. 2 நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது ஒரு உறுதியைக் கொடுத்தார். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், மத, இன, மொழி வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அவர் பேசினார்.
ஆனால், இப்போது பீகாருக்கு மட்டும் இலவச தடுப்பூசி என்று பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்படுகிறது என்றால், பாஜகவை வழிநடத்துவது யார்? பாஜக தலைமையில் என்ன குழப்பம்? பீகாரைத் தவிர மற்ற மாநிலங்கள் எல்லாம் பாகிஸ்தான் அல்ல. பீகார் தேர்தலில் பாஜக தலைவர்கள், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளையே கடைப்பிடிக்காமல் பிரச்சாரம் செய்கிறார்கள். கொரோனா காலத்தில் தேர்தலை நடத்துவதே தவறு என்று கூறப்பட்டிருக்கிறது.