போலி ஆவணங்கள் மூலம் காவல் துறைக்கு சொந்தமான இடம் விற்பனை... பத்திரப்பதிவு ஊழியர் சஸ்பெண்ட்...!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திரப் பதிவுத் துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் சங்கரன்கோவில் பிரதான சாலை அருகே காவல்துறைக்குச் சொந்தமான 2.1 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் காவலர் குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் அறிவிப்பு விளம்பரமும் வைக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் எதுவும் கட்டாமல் இந்த நிலம் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளது. இப்பகுதியில், ஒரு சென்ட் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் முதல் 30 லட்சம் வரை உள்ளது.

இந்நிலையில், சிலர் இந்த நிலத்துக்கான போலியான ஆவணங்களைத் தயார் செய்து அதன்மூலம் பத்திரம் பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர்.இதுகுறித்து, சுரண்டை கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் சுரண்டை போலீசார் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களான ராஜேந்திரன், மனோகரன் ஆகிய இருவர் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாகக் கடந்த மார்ச் மாதம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் இருவரும் தலைமறைவாகி முன் ஜாமீன் பெற்றனர்.

இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரன் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் தற்போது தென்காசி அருகே உள்ள இடைகால சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். கைது நடவடிக்கைக்குப் பின்னர் நேற்று இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் நெல்லை மண்டல பத்திரப் பதிவுத் துறை உதவி தலைவர் ஆறுமுகம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு எழுத்தர்களின் லைசென்சை ரத்து செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

More News >>