மதுரை வக்போர்டு கல்லூரி நிர்வாக குழு தேர்தலுக்கு இடைக்கால தடை...!
மதுரையில் உள்ள வக்போர்டு கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையில் உள்ள வக்போர்டு கல்லூரிக்கு , நிர்வாக குழு தேர்தல் நடைபெறுவதற்காக மதுரை வக்போர்டு கல்லூரி அக்டோபர் 7 மற்றும் அக்டோபர் 12-ம் தேதிகளில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்தத் தேர்தலில் உரிய விதிமுறைகளின்படி நடத்தப்படுவதில்லை எனவே இதைத் தடை செய்ய வேண்டும் என மதுரையைச் சேர்ந்த முகமது மைதீன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அவர் தமது மனுவில் இந்த தேர்தல் அறிவிப்பில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், உரிய விதிமுறைப்படி சந்தா செலுத்தாத உறுப்பினர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது.எனவே தற்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்புக்கு அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதுரை வக்போர்டு கல்லூரிக்கு நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.மேலும் இது குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் , தமிழ்நாடு வக்ப்போர்டு நிர்வாக தலைவர் , மதுரை வக்போர்டு கல்லூரி நிர்வாகம் ஆகியோர்7 உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.