பணிமூப்பு கணக்கிட கோரி உயர் நீதிமன்ற ஊழியர்கள் உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முதுநிலை தட்டச்சர், பதிவாளரின் நேர்முக உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர்கள் இடையே பணி மூப்பு நிர்ணயம் செய்யாமல் துறை அலுவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கத் தடை கோரி வழக்கு.சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் அனுராதா, வினோ பாரதி, ரேணுகா, உமாபிரியா ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மூப்பு நிர்ணயம் செய்யாமல் துறை அலுவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கத் தடை கோரி ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் தங்கள் மனுவில் நாங்கள் தட்டச்சராகத் தேர்வு செய்யப்பட்டு 2008ல் பணியில் சேர்ந்தோம். 2016-ல் முதுநிலை தட்டச்சராக நாங்கள் பதவி உயர்வு பெற்றோம். நகல் எடுப்பவர்கள் என்ற பிரிவினர் தங்கள் பணியைத் தட்டச்சர் பணியுடன் சேர்க்க வேண்டும் அல்லது தங்களையும் தட்டச்சராக அழைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதன்பின் இரு பணியிடமும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு பின்னர் நகல் எடுப்பவர் என்ற பணியிடம் நீக்கப்பட்டது.
இந்த நிலையில் துறை அலுவலருக்கான பதவி உயர்வில் எங்கள் பணி மூப்பு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. எனவே, முதுநிலை தட்டச்சர், பதிவாளரின் நேர்முக உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர்கள் இடையே பணி மூப்பு நிர்ணயம் செய்யாமல் துறை அலுவலர்கள் பதவி உயர்வு வழங்கத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், அப்துல் குத்தூஸ் அமர்வு வழக்கு விசாரணையை வரும் 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.