மெனோபாஸ் காலத்துக்கு தயாராவது எப்படி தெரியுமா?

'மெனோபாஸ்' பெண்கள் வாழ்வில் இதுவும் ஒரு பருவமாகும். மாதவிடாய் வருவது ஓராண்டு முழுவதும் நின்றுவிட்டால் 'மெனோபாஸ்' பருவத்தை எட்டியது உறுதியாகிறது. இந்தியாவில் 'மெனோபாஸ்' வரும் வயது சராசரியாக 46 ஆண்டுகள் என்று கருதப்படுகிறது. ஒரு பெண்ணின் சினைப்பைகள் பெண்களுக்கான இனப்பெருக்க ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனை உருவாக்குவது நின்று போவதே மெனோபாஸின்போது நிகழும் முக்கியமான உடலியல் மாற்றமாகும்.

மெனோபாஸ் அறிகுறிகள்

மெனோபாஸ் நிலையை நெருங்கக்கூடிய ஆண்டுகள் மெனோபாஸுக்கு முந்தைய காலம் என்று அழைக்கப்படுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் சுற்று, முகத்தில் திடீரென சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை தோன்றும் சூடான உணர்ச்சி (hot flashes), காரணமின்றி வியர்த்தல், மனப்போக்கில் எரிச்சல், உணர்வுரீதியான மாற்றம், கோபம் மற்றும் அழுகை உள்ளிட்ட மாற்றங்கள், சிறுநீர் ஒழுக்கு, சிறுநீர் கழிக்க அவசரம், பெண்ணுறுப்பு வறண்டுபோதல் மற்றும் பெண்ணுறுப்பில் எரிச்சல், சருமம் வறளுதல், அரிப்பு மற்றும் கூந்தல் வலுவிழத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முகத்தில் தோன்றும் சூடான உணர்ச்சி பொதுவாக 80 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது.

மெனோபாஸ் கால பாதிப்புகள்

ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டின் காரணமாக எலும்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம், வலுவிழத்தல் மற்றும் இதயத்தில் கொழுப்பு படிதல், இதய திசுக்களுக்கு போதுமான இரத்தம் கிடைக்காமை, மனப் பிரமை, மனோவியல் குறைபாடுகள், மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் உருவாகக்கூடும்.

கவனிக்கவேண்டியவை

மெனோபாஸுக்கு முந்திய ஆண்டுகளில் உடல்நலத்தைக் குறித்த கவனம் அதிகம் தேவை. வெளியே தெரியாமல் ஏதாவது நோய்கள் உள்ளனவா அல்லது புதிதாக ஏதாவது நோய்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதை அறிய சில சோதனைகள் செய்துகொள்வது அவசியம். இரத்தசோகை, கால்சியம் குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு, எலும்பு தேய்மானம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சனை போன்றவை உள்ளனவா என்று சோதிப்பது முக்கியம். கருப்பையின் அடியில் உருவாகக்கூடிய புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளைச் செய்யவேண்டும்.

வாழ்வியல் மாற்றங்கள்

மெனோபாஸ் பருவத்தில் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். உடற்பயிற்சிக்கும், ஊட்டச்சத்துக்கும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். நடத்தல், ஓடுதல், மாடிப்படியேறுதல் உள்ளிட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யவேண்டும். யோகாசனம் செய்யலாம். கால்சியம், இரும்புச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். நுண்ணூட்டச்சத்து உணவுகளைச் சாப்பிட வேண்டும். தாவர ஈஸ்ட்ரோஜனான பைட்டோஈஸ்ட்ரோஜன் இருக்கும் சோயா போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

More News >>