கொரோனா பாதித்து இறந்தவர்கள் முகத்தை நெருங்கிய உறவினர்கள் பார்க்கலாம்... கேரளாவில் அனுமதி...!
கொரோனா நோய் பாதித்து இறந்தவர்களின் முகத்தைக் கூட கடைசியில் நம்மால் பார்க்க முடியாது. உடலிலிருந்து வைரஸ் உடனடியாக மற்றவருக்குப் பரவ வாய்ப்பிருப்பது தான் இதற்குக் காரணமாகும். கேரளாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் முகத்தை நெருங்கிய உறவினர்கள் மட்டும் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா போல ஒரு மோசமான நோய் வேறு எதுவும் இருக்கமுடியாது. இந்த நோய் பாதித்து இறந்தால் அவரது உடலை நெருங்கிய உறவினர்களால் கூட பார்க்க முடியாது. உடலை பிளாஸ்டிக் கவர்களால் 3 அடுக்குகளில் சுற்றி 10 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும். இல்லாவிட்டால் வைரஸ் மிக எளிதில் பரவிவிடும். கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை எப்படி அடக்கம் செய்ய வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதன்படி தான் உலகம் முழுவதும் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. எந்தக் காரணம் கொண்டும் கொரோனா பாதித்து இறந்தவரின் உடலுக்கு அருகே செல்லக்கூடாது. உடலைத் தொடவோ, முத்தம் கொடுக்கவோ, கட்டிப்பிடிப்பதோ கூடாது.இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஆட்கள் கலந்து கொள்ள முடியும். அதுவும் இடைவெளிவிட்டுப் பாதுகாப்பான முறையில் நிற்க வேண்டும். இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் முகத்தை மட்டும் நெருங்கிய உறவினர்களுக்குப் பார்க்க வசதி செய்யப்பட உள்ளது. இந்த தகவலைக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உலக சுகாதார அமைப்பின் நிபந்தனைகளின் படியே கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. இறந்தவர்களை நெருங்கிய உறவினர்கள் கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. அவர்களது வேதனையை போக்குவதற்காகக் கடைசியாக முகத்தை மட்டும் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறந்தவரின் முகத்திலுள்ள ஜிப்பை மட்டும் திறந்து காட்டப்படும். உடலுக்கு அருகே செல்லும் போது பாதுகாப்பு கவச உடை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.