தலைமை நீதிபதி தடாலடி உத்தரவு :ஒரு மணி நேரத்தில் மாயமான புறக்காவல் நிலையம்...!

அம்பாசமுத்திரத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை மறைத்துக் கட்டப்பட்டிருந்த புறக்காவல் நிலைய கட்டிடத்தை உடனடியாக அகற்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இரவோடு இரவாகப் புறக்காவல் நிலையம் இடித்து அகற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 7.23 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது. இது கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று நெல்லை வந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரிஷ்வர் பிரதாப் ஷாகி அம்பாசமுத்திரம் வந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தையும் ஆய்வு செய்தார். அப்போது அவர் நீதிமன்றம் முன்பு நுழைவு வாயிலை மறைத்தபடி கட்டப்பட்டிருந்த புறக்காவல் நிலையத்தை அகற்ற உத்தரவிட்டார் . அதை உடனடியாக அகற்ற வில்லை என்றால் ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து புறக்காவல் நிலையம் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாகப்பட்டது. இந்த புறக்காவல் நிலையம் அனுமதியின்றி கட்டப் பட்டும் அதற்கு விதிகளை மீறி மின் இணைப்பும் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே இந்த புறக்காவல் நிலையத்தை அகற்றக் கோரி வழக்கறிஞர் உ. சிவசைலநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது . இந்த நிலையில் ஆய்வுக்கு வந்த தலைமை நீதிபதியிடம் இது குறித்து வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து அதை ஆய்வு செய்த தலைமை நீதிபதி அதை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துச் சென்றார் நீதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து புறக்காவல் நிலையத்தை காவல்துறையினர் இரவோடு இரவாக இடித்து அப்புறப்படுத்தினர் . இன்னும் 10 நாட்களில் நீதிமன்றம் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

More News >>