தந்தை இறந்த துக்கத்திலும் களம்புகுந்த வீரர்.. உருகவைக்கும் மந்தீப் சிங்!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் மந்தீப் சிங். கடந்த போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில் இன்று, மயங் அகர்வால் காயத்தால் விளையாடததால் இன்றைய போட்டியில் களம் கண்டார். அதன்பிறகு அவரின் பின்னால் இருக்கும் சோகம் தெரியவந்தது. மந்தீப்பின் தந்தை ஹர்தேவ் சிங்உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இந்த சோகத்துக்கு மத்தியிலும் விளையாடினார் மந்தீப். நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் அவரது தந்தை ஹர்தேவ் சிங் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த மாதம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர், ஆனால் மேலும் அவரது உடல்நிலை மோசமடையவே சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக தற்போது விளையாடி வரும் மந்தீப், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயோ செக்யூர் பாதுகாப்பு சூழலில் இருப்பதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு வெளியேறி தனது தந்தையின் இறுதி சடங்குகளுக்கு வீடு திரும்புவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையே, மந்தீப்பின் தந்தை மறைவுக்காக, பஞ்சாப் வீரர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தற்போது விளையாடி வருகின்றனர்.