கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்துவேன்.. சபதம் எடுத்த மந்தீப் தந்தையின் சோகமான பின்னணி!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் மந்தீப் சிங்கின் தந்தை ஹர்தேவ் சிங்உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். தந்தை இறந்த சோகத்துக்கு மத்தியிலும் மந்தீப் இன்றைய போட்டியில் விளையாடி வருகிறார். நீண்ட நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹர்தேவ் சிங் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே, ஹர்தேவ் சிங் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹர்தேவ், மந்தீப்பின் திறமை மீது அதிக நம்பிக்கை கொண்டவர். மேலும், தனது மகனை இந்திய அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தவர். 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணிக்கு மந்தீப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக, மந்தீப் தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்கும் வரை கிரிக்கெட்டைப் பார்க்க மாட்டேன் என்று ஹர்தேவ் சபதம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
``ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கு மந்தீப் தேர்வு செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, நான் மந்தீப்பின் வாழ்க்கையைப் பற்றி எனது மூத்த மகன் ஹர்விந்தர் சிங்குடன் விவாதித்தேன். இந்திய அணியின் மந்தீப்பை பார்க்க நான் மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். இந்த முறை மந்தீப் முக்கிய அணியில் இடம் பெறாவிட்டால் கிரிக்கெட்டைப் பார்ப்பதை நிறுத்துவேன் என்று ஹர்விந்தரிடம் சொன்னேன். சில மணிநேரங்களுக்குப் பிறகு, நற்செய்தி வந்தது, என் உற்சாகத்திற்கு எல்லையே தெரியாது" என 2016ல் ஹர்தேவ் பேட்டி கொடுத்திருக்கிறார்.