சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் தபால் வழியாக பெறலாம் புதிய வசதி.
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் விரைவில் தபால் வழியாக பக்தர்களுக்கு கிடைக்கும். இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டும், தபால் துறையும் ஆலோசனை நடத்தி வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல கால பூஜைகள் அடுத்த மாதம் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். மண்டல கால பூஜைகளில் வழக்கமாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். ஆனால் இவ்வருடம் நிலைமை தலைகீழாகி விட்டது. கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் மண்டல கால பூஜைகளின் போது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் 1,000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களில் 2,000 பக்தர்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது சபரிமலை பக்தர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட தென் மாநிலங்களிலிருந்து தான் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்கின்றனர். வருடம்தோறும் விரதமிருந்து, மாலையணிந்து, இருமுடி கட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் இவ்வருடம் சபரிமலை செல்ல முடியுமா என்ற கலக்கத்தில் உள்ளனர். கடந்த வாரம் ஐப்பசி மாத பூஜைகளுக்கு நடை திறக்கப்பட்டிருந்த போது 7 மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தினமும் 250 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தரிசனத்திற்கு ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும், 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே சபரிமலை சென்றனர். 5 நாளில் மொத்தம் 673 பக்தர்கள் மட்டும் தான் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் சபரிமலை செல்லமுடியாத பக்தர்களின் வசதிக்காக சபரிமலை கோவில் பிரசாதத்தை தபால் மூலம் அனுப்ப திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. சபரிமலையின் முக்கிய பிரசாதங்களான அரவணை, நெய், விபூதி, மஞ்சள், குங்குமம் ஆகியவை தபால் மூலம் கிடைக்கும். இதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு அருகே உள்ள தபால் அலுவலகத்தில் சென்று பணம் கட்டி பிரசாதத்தை வாங்கிக் கொள்ளலாம். விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.