ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் இடமாற்றம் வழக்கமான ஒன்று தான் என்றாலும், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், கூடுதல் தலைமைச் செயலர் அபூர்வ வர்மா விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பதிவுத்துறை ஐஜியாக சங்கரும்; TANGEDCO மேலாண் இயக்குநராக பிரசாந்த் மு வடநேரேவும், தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராகவும், தருமபுரி ஆட்சியராக கார்த்திகாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மதுரைக்கும், பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா திருவாரூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி ஆட்சியராக அரவிந்த் ஐஏஎஸ் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் குறித்து பல்வேறு புகார்கள் வந்தது. குறிப்பாக, கடந்த தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்கு எதிராக செயல்படுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உடன் நேரடியாக மோதல் மேற்கொண்டார். இந்தநிலையில் அன்பழகன் மாற்றப்பட்டிருக்கிறார்.