பெரம்பலூர் அருகே கண்டறியப்பட்டது டைனோசர் முட்டைகளா?
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஏரியில் தூர் வாரும் பணிகள் நடந்த போது முட்டை வடிவிலான 80 புதை படிம உருண்டைகள் கண்டறியப்பட்டது. டைனோசரின் முட்டைகள் என ஊருக்குள் தகவல் பரவியது.
இந்த உருண்டைகளுடன் அதே ஏரியில் சிதைவுற்ற நிலையில் அமோனைட் எனப்படும் மூன்று கடல் நத்தைகளின் படிமங்கள் மற்றும் ஆனைவாரி ஓடையில் கிடைத்த 7 அடி நீள கொண்ட கல் மர படிமங்களை கிடைத்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த திருச்சி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், அரியலூர் புதைபடி அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் இது குறித்து கூறுகையில் அவை டைனோசர் முட்டைகள் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து இந்த 80 படிமஉருண்டைகள், 3 அமோனைட்படிமங்கள் மற்றும் கல்மரபடிமம் ஆகியவை குறித்து சென்னை புவியியல் அருங்காட்சியக காப்பாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குன்னம் ஏரியில் கண்டறியப்பட்டுள்ள படிம உருண்டைகள், அமோனைட் படிமங்கள் மற்றும் ஆணை வாரி ஓடையில் கிடைத்த 7 அடி நீளமுள்ள கல் மர படிமம் ஆகியவை குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டு அதுகுறித்த அறிக்கை அருங்காட்சியக ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பலதரப்பட்ட மீம்ஸ்களால் பரபரப்பாகி வருகிறது.