பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசபடுத்தும் பஞ்சாப்! நழுவவிட்ட ஹைதராபாத்!
இந்த சீசனில் சென்னை அணியை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. இந்த நிலையில் நேற்றைய (24-10-2020) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முக்கியமான போட்டியான இதில் டாஸ் வென்று ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி, காயம் காரணமாக இன்றைய போட்டியில் மயங்க் அகர்வாலுக்கு பதில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டார். எனவே தொடக்க இணையாக ராகுல் மற்றும் மந்தீப் சிங் களம் கண்டனர். ஆனால் மந்தீப் சிங்கை சந்தீப் ஷர்மா வீழ்த்தி, இந்த இணையை பிரித்தார்.
பின்னர் களமிறங்கிய கெயில் (20), ராகுல்( 27), பூரன் (32) ரன்களில் அவுட்டாக பஞ்சாப் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் வெகு சிறப்பாக செயல்பட்டனர். பஞ்சாப் அணியின் அடுத்தகட்ட பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில், சொற்ப ரன்களில் அவுட்டாக பஞ்சாப் அணி இருபது ஓவர் முடிவில் 126/7 ரன்களை சேர்த்தது. நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் சார்பில் பந்து வீசிய ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான் மற்றும் சந்தீப் ஷர்மா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இருபது ஓவரில் 127 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ஹைதராபாத் அணி. பஞ்சாப் அணியின் பந்து வீச்சு கடந்த மூன்று போட்டிகளில் சிறப்பாக இருந்தது. இருந்தாலும் அவருக்கு 6.5 ரன் ரேட் என்பது மிக எளிதான ஒன்று என்பதால் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியிருந்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க இணையான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.இந்த இணை 56 ரன்களை சேர்த்தது. 20 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர் விளாசி அசத்தி கொண்டிருந்த வார்னரை தன் சுழலில் வீழ்த்தி அசத்தினார் ரவி பிஷ்னோய்.
வெற்றி பெற 82 பந்தில் 71 ரன்கள் தேவைப்பட்டது ஹைதராபாத் அணிக்கு ஆனால் ஏழாவது ஓவரை வீசிய அஷ்வின் பேர்ஸ்ட்டோ விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாமல் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினார். ஒருகட்டத்தில் ஹைதராபாத் அணியை விட சிறப்பான பந்து வீச்சை பஞ்சாப் அணியினர் வெளிப்படுத்தினர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் இந்த போட்டியிலும் அணியின் வெற்றிக்காக போராடினார். அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் 27 ரன்களை எடுத்திருந்த விஜய் சங்கர் அவுட்டாகி அணியின் நம்பிக்கையை ஏமாற்றினார். 16 ஓவர் முடிவில் 100/4 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் திணறியது. 24 பந்தில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட்டுகள் கையில் இருந்தது.
எளிதாக வெற்றி பெற வேண்டிய ஹைதராபாத் அணி 14 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வி அடைந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் வழக்கம் போல் சொதப்பினர். அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹைதராபாத் அணியின் ரஷ்த் கான் , சந்தீப் ஷர்மா மற்றும் கலீல் அகமது என மூவரையும் டக் அவுட் ஆகி வெளியேற்றி அசத்தினர் பஞ்சாப் வீரர்கள். பஞ்சாப் அணி சார்பில் பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் மற்றும் கிரிஸ் ஜோர்டன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஷமி, பிஷ்னோய் மற்றும் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிரிஸ் ஜோர்டன் (4-0-17-3) 3 விக்கெட்டுகளை, ஓவருக்கு 4.23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் 5 வெற்றிகளை பதிவு செய்து 10 புள்ளிகளுடன் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் அணி.