கொரோனா கிலோ என்ன விலை? மாஸ்கும் இல்லை, சமூக அகலமும் கிடையாது பீகாரில் தேர்தல் பேரணிகளில் குவியும் மக்கள்.
பீகாரில் கொரோனா குறித்த எந்த அச்சமும் இல்லாமல் தேர்தல் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இதில் பெரும்பாலானோரிடம் முகக்கவசமும் கிடையாது, சமூக அகலத்தையும் கடைபிடிப்பதில்லை. எல்லா கட்சிக் கூட்டங்களிலும், பேரணிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில் 71 தொகுதிகளுக்கு வரும் 28ம் தேதியும், 2வது கட்டத்தில் 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதியும், 3வது கட்டத்தில் 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளிலும் தற்போது தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் இந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது.
இந்த தேர்தலில் கொரோனா தடுப்பூசி தான் முக்கிய பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தங்கள் வெற்றிபெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பீதி இன்னும் குறையவில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக அவலத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கடும் நிபந்தனைகள் உள்ள நிலையில் பீகார் மாநிலத்தில் இந்த நிபந்தனைகள் எதுவுமே தற்போது பின்பற்றப்படுவதில்லை.
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கில் மக்கள் எந்த ஒரு அச்சமுமின்றி திரண்டு வருகின்றனர். பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவதில்லை, சமூக அகலத்தையும் கடைப்பிடிப்பதில்லை. கொரோனாவுக்கு முன் நிலைமை எப்படி இருந்ததோ அதே நிலைமை தான் தற்போது பீகாரில் காணப்படுகிறது. மேடைகளில் தலைவர்களும் எந்த கொரோனா நிபந்தனைகளையும் பின்பற்றுவதில்லை. அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை. பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்திலும் இதே நிலை தான் காணப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பீகாரில் ஒரு சில நாட்களில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.