இருமலையும் சளியையும் போக்கும் எளிய வீட்டு வைத்தியம்.
பருவநிலை மாறினால் சில உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். மருத்துவ வசதிகள் பெருகாத காலத்தில் பாட்டிமார் வீட்டு வைத்தியத்திலேயே சிறு உபாதைகளை குணப்படுத்தியுள்ளார்கள். அது போன்ற வைத்திய குறிப்புகளை அறிவியல் ஆதாரம் இல்லையென்று நாம் ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிவிடுகிறோம். வீட்டு வைத்தியத்தில் சேர்க்கப்படும் மருத்துவகுணம் கொண்ட தாவரங்கள், பொருள்களை சரியானவிதத்தில் ஆராய்ந்தால் அவற்றின் நன்மைகள் நமக்குப் புரியும்.
பருவகாலத்தில் மாற்றம் ஏற்படும்போது உடலுக்கு குறிப்பிட்ட நோய்களை எதிர்க்கக்கூடிய ஆற்றல் அதிகமாக தேவைப்படுகிறது. மழை மற்றும் குளிர்காலத்தில் இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி மற்றும் சாதாரண சளி தொல்லைகள் ஏற்படுவது வழக்கம். அவற்றை போக்குவதற்கு வெங்காயத்தை பயன்படுத்துவது பாரம்பரிய வழக்கம். வெங்காயத்தில் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்), மெக்னீசியம், இரும்புச் சத்து மற்றும் துத்தநாகம் (ஸிங்க்) ஆகியவை உள்ளன.
வெங்காயம் மற்றும் வெங்காய சருகினை கொண்டு டீ தயாரித்து அருந்தினால் சாதாரண சளி சார்ந்த தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
வெங்காய டீ
தேவையானவை:வெங்காயம் - 1, கறுப்பு மிளகு - 2 அல்லது 3, ஏலக்காய் - 1, பெருஞ்சீரகம் (சோம்பு) - அரை தேக்கரண்டி
செய்முறை: ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்து கொதிக்கவைக்கவும். அதனுள் நறுக்கிய வெங்காயத்தை போடவும். கூடவே மிளகு, ஏலக்காய் மற்றும் பெருஞ்சீரகத்தை சேர்க்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் குறைந்த ஜூவாலையில் சூடாக்கவும். பின்னர் நீரை வடித்து, இனிப்பு எதுவும் சேர்க்காமல் அருந்தவும்.
வெங்காய சருகு டீ
தேவையானவை:ஒரு வெங்காயத்தின் சருகு (மேல்தோல்), தேயிலை அல்லது கிரீன் டீ இலை.
செய்முறை:தண்ணீரை கொதிக்கவைக்கவும். அதனுள் தேயிலை அல்லது கிரீன் டீக்கான இலையை போடவும். வெங்காய சருகினையும் சேர்க்கவும். பின்னர் பத்து நிமிடங்கள் குறைந்த ஜூவாலையில் சூடாக்கவும். தேநீரை வடித்து சுவைக்காக சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தவும்.
இவை சாதாரண சளி மற்றும் துணை பாதிப்புகளிலிருந்து குணம் தரும் வீட்டு வைத்திய முறைகளாகும்.