விமானத்தில் வைத்து நடிகையிடம் தொந்தரவு.. 9 பத்திரிகை நிருபர்களுக்கு இண்டிகோ விமானம் தடை.

விமான பயணத்தின் போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை தொந்தரவு செய்த 9 பத்திரிகைகயாளர்களுக்கு 15 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய இண்டிகோ விமானம் நிறுவனம் தடை விதித்துள்ளது.

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான விஷயங்கள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் விவசாய மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை தீவிரவாதிகள் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சுஷாந்த் சிங் மரணம் குறித்தும் இவர் அவ்வப்போது சர்ச்சையான சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது தொடர்பாகவும் இவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விவகாரத்தில் கங்கனாவுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி கங்கனா தனது சொந்த ஊரான சண்டிகரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார்.

அந்த விமானத்தில் 9 பத்திரிகை நிருபர்களும் இருந்தனர். அவர்கள் சுஷாந்த் சிங் விவகாரம் குறித்து பேட்டி கொடுக்க வேண்டும் என்று கங்கனாவிடம் கூறினர். ஆனால் முதலில் கங்கனா அதற்கு மறுத்துள்ளார். பத்திரிகையாளர்கள் நிர்பந்தித்ததை தொடர்ந்து அவர் பேட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமானத்தில் வைத்து நடிகை கங்கனா ரனாவத்திடம் பத்திரிகையாளர்கள் மோசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. மேலும் கொரோனா நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றும் கூறப்பட்டது. இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க இண்டிகோ விமான நிறுவனத்திற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் 9 பேருக்கும் 15 நாட்கள் தங்களது விமானத்தில் பயணம் செய்ய இண்டிகோ விமான நிறுவனம் தடை விதித்து உத்தரவிட்டது.

More News >>