ஜப்பானுக்கு செல்லும் தமிழ் படம்.. உலகம் சுற்றி விருதுகள் குவிக்கின்றனர்..
ஒரு காலத்தில் ஹாலிவுட் படங்கள் தான் உலகம் முழுக்க வெளியாகிக் கொண்டிருந்தது. டிஜிட்டல் யுகத்துக்கு உலகம் மாறிய பிறகு எல்லாம் பரவலாகிவிட்டது. கையடக்க செல் போனிலேயே உலகம் அடங்கிவிடுகிறது. ஹாலிவுட் படங்கள் போல் தமிழ் படங்களும் உலகம் முழுக்க வெளியாகி வரவேற்பையும் பெற்று வருகிறது. தற்போது தமிழ் படம் சில்லுக்கருப்பட்டி ஜப்பான் திரைப்பட விழாவில் பங்கேற்று விருது வென்றுவர பறக்கிறது.
அதுபற்றிய விவரம் வருமாறு: சென்ற ஆண்டு தமிழில் வெளியான 'சில்லுக் கருப்பட்டி' திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் இப்போது ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவிலும் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி அங்கு திரையிடப்படுகிறது. சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்த இந்த திரைப்படம் 4 வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு வெளியானது முதல் இன்றுவரை பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்பொழுது மற்றுமொரு கௌரவம் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில்தான் பார்த்திபனின் ஒத்தை செருப்பு சைஸ்7 கன்னிமாடம் போன்ற படங்கள் மற்றும் செக்யூரிட்டி குறும்படம் போன்றவை வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.