மாட்டுக்கறி ஓ.கே.வா? கவர்னரை போட்டு தாக்கும் உத்தவ்..
கோவாவில் மாட்டுக்கறிக்குத் தடையில்லை. இதுதான் பாஜகவின் இந்துத்துவா கொள்கையா? என்று உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. அங்குப் பள்ளிகள், கோயில்கள் போன்றவை திறக்கப்படவில்லை.
இதற்கிடையே, அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர், நீங்கள்(உத்தவ்) தீவிர இந்துத்துவா கொள்கை கொண்டவர். ராமஜென்ம பூமிக்குச் சென்று வந்திருக்கிறீர்கள். ஆனாலும், மகாராஷ்டிராவில் ஏன் கோயில்களைத் திறக்காமல் வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்குப் பிடிக்காத மதச்சார்பின்மைக்கு நீங்கள் மாறி விட்டீர்களா? என்று கேட்டிருந்தார்.
இதற்கு உத்தவ் தாக்கரே அளித்த பதிலில், எனக்கு உங்கள் சர்டிபிகேட் எல்லாம் தேவையில்லை என்று காட்டமாகக் கூறியிருந்தார். மேலும், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டிருக்கும் போது கவர்னர் எப்படி இது போல் பேசலாம் என்று பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே நேற்று(அக்.25) விஜயதசமி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எங்கள் இந்துத்துவா கொள்கைகளைப் பற்றி கருப்பு தொப்பி அணிந்துள்ளவர்(கவர்னர்) விமர்சிக்கிறார். கருப்பு தொப்பி அணிய விரும்புபவர்கள் அவரை பின்பற்றுங்கள். உண்மையான இந்துத்துவா கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொல்வதைக் கேளுங்கள். வெறும் பூஜை புனஸ்காரங்கள் செய்வது மட்டுமே இந்துத்துவா அல்ல. ஆன்மீக பாரம்பரியத்துடன் ஒட்டுமொத்த பாரதத்தின் வளர்ச்சியே இந்துத்துவா கொள்கை என்று அவர் கூறியிருக்கிறார்.
பாஜகவைப் பொறுத்தவரை இரட்டை வேடம் போடுகிறது. மகாராஷ்டிராவில் மாட்டுக் கறிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாஜக ஆளும் கோவாவில் மாட்டுக்கறிக்கு எந்த தடையும் கிடையாது. அதுதான் பாஜகவின் இந்துத்துவா கொள்கையா? என்று கேட்டார்.மகாராஷ்டிராவில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே இந்த மோதல் போக்கு நீடித்து வருகிறது.