ரஷ்ய தூதர்கள் வெளியேற்றம்... புடீனுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியா?

உளவாளிக்கு விஷம் வைத்ததாக கூறப்படும் விவகாரத்தில் 2 ரஷ்ய தூதர்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

செர்கெய் ஸ்கிரிபால் ரஷ்ய ராணுவத்தின் உளவு பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அதன் பின்னர் இவர் இங்கிலாந்து நாட்டிற்காக உளவு வேலையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதனால், கைது செய்யப்பட்ட ஸ்கிரிபால், உளவாளிகள் பரிமாற்றம் அடிப்படையில் கடந்த 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனால், இங்கிலாந்தில் வசித்து வந்த ஸ்கிரிபால், சாலிஸ்பரி நகரில் மார்ச் 4-ஆம் தேதி தனது மகள் யூலியாவுடன் மயங்கிக் கிடந்தார். இதனைத் தொடர்ந்து அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களின் உடலில் விஷம் ஏறியிருப்பதாக தெரிவித்தனர்.

இந்த விவகாரத்திற்கு ரஷ்யாதான் காரணம் என இங்கிலாந்து குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்தது.

எனினும், ரஷ்யாவின் 23 தூதரக அதிகாரிகளை உளவு அதிகாரிகள் என்று கூறி இங்கிலாந்து வெளியேற்றியது. இதேபோல ரஷ்யாவும் இங்கிலாந்து தூதர்களை வெளியேற்றியது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பணியாற்றிய ரஷ்யாவின் 60 தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 2 ரஷ்ய தூதர்களை உளவு துறை அதிகாரிகள் என்று கூ றி அவர்களை வெளியேற்ற ஆஸ்திரேலியாவும் முடிவு செய்துள்ளது. இதனை அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் உறுதிபடுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்றுள்ள விளாதிமிர் புடீனுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் இந்த விவகாரத்திற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>