அமெரிக்க தேர்தல்.. 59 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவு..
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 9 நாட்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே 59 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோபிடன் போட்டியிடுகிறார்.
துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் டிரம்ப் அரசு சரியாகக் கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. டிரம்ப்புக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால், ஜோபிடன் வெற்றி பெறுவார் எனக் கருத்துக் கணிப்புகளும் கூறி வருகின்றன.
அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன்பிருந்தே வாக்களிக்கும் வசதி உண்டு. தேர்தலுக்கு 9 நாட்கள் உள்ள நிலையில், அங்கு இப்போது பூத்களில் வாக்காளர்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். கொரோனா காலத்திலும் கூட்டமாகச் சென்று வாக்களித்துள்ளனர். நேற்று(அக்.25) வரை 59 மில்லியன்(5கோடி70 லட்சம்) பேர் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் முன்கூட்டியே பதிவான 57 மில்லியனை விட அதிகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த தேர்தலில் 130 மில்லியன் பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் இது 150 மில்லியனாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சிதான், மக்களிடம் முன்கூட்டியே வாக்களிக்குமாறு தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தது. எனவே, இந்த அதிகமான வாக்குப்பதிவு ஜோ பிடனுக்கு சாதகமாக இருக்கலாமா என்ற பரபரப்பான விவாதங்களும் நடைபெற்று வருகிறது.