நெல்லை ஸ்மார்ட் சிட்டி : 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நட திட்டம்
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடும் பணிகள் துவங்கியது.மத்திய அரசின் "ஸ்மார்ட் சிட்டி" சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இதன் படி சந்திப்பு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், டவுண் நேதாஜி போஸ் மார்க்கெட் உள்பட அனைத்தும் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் நவீன வணிக வளாகங்கள் கட்டுப் பணியும் நடந்து வருகிறது.
நெல்லை வேய்ந்தான் குளம் புதிய பேருந்து நிலையத்தில் 120 மரங்கள் உள்ளது.. புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வேம்பு, பூவரசு, மருது உள்ளிட்ட மரபு வாய்ந்த மரங்களை வெட்டி அழிக்காமல், ஒரு தனியார் அமைப்புடன் நெல்லை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து அந்த மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடவு செய்யத் திட்டமிடப்பட்டது. மிகப்பழமையான இந்த மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடும் பணிகள் நேற்று துவங்கியது தோண்டிய இடத்தில் உள்ள தாய் மண்ணை எடுத்து மரம் நடப்பட்ட புதிய குழியில் போடப்பட்டது.இதன்படி பேருந்து நிலையத்தில் இருக்கும் 120 மரங்கள் அருகிலுள்ள வேய்ந்தான் குளம் கரையில் நடவு செய்யப்பட உள்ளது.