நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சருக்கு 3 வருடம் சிறை
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சர் திலீப் ராய்க்கு சிபிஐ நீதிமன்றம் 3 வருடம் சிறைத் தண்டனையும், ₹10 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தார்.வாஜ்பாய் தலைமையிலான முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தவர் திலீப் ராய். கடந்த 1999ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிரம்மதிஹா நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி அளிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக இவர் மீது புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி பரத் பரஷர், நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் திலீப் ராய் குற்றவாளி எனக் கடந்த 14ம் தேதி தீர்ப்பளித்தார். தண்டனை குறித்த விவரங்கள் அக்டோபர் 26ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி முன்னாள் அமைச்சர் திலீப் ராய்க்கு 3 வருடம் சிறைத் தண்டனையும், 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அந்த சமயத்தில் நிலக்கரித் துறை அதிகாரிகளாக இருந்த பிரதீப் குமார் பானர்ஜி, மற்றும் நித்தியானந்த கவுதம் ஆகியோருக்கும் 3 வருடம் சிறைத்தண்டனை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.