லாக்டவுன் காலத்தில் ஒழுங்காக கடனை அடைத்தவர்களுக்கு பரிசு...!

லாக்டவுன் காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியவர்களுக்குப் பரிசு வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி ₹50 லட்சம் வரை கடன் வாங்கியவர்களுக்கு அதிகபட்சமாக ₹12,425 கிடைக்கும்.கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் திடீரென லாக்டவுன் அறிவித்தது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் தங்களது தொழில்களை இழந்தும், வருமானத்தை இழந்தும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெரும்பாலானோர் சிரமப்பட்டனர். இதனால் லாக்டவுன் காலத்தில் இஎம்ஐ தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து முதலில் 3 மாதங்களுக்கும், பின்னர் 6 மாதங்களுக்கும் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த 6 மாதத்திற்கான வட்டியும், கூட்டு வட்டியும் கட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் கூட்டு வட்டியை ரத்து செய்ய முடியாது என்றும், ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றும் மத்திய அரசு கூறியது. ஆனால் கூட்டு வட்டியை ரத்து செய்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியாகக் கூறியது. இதையடுத்து வட்டியையும், கூட்டு வட்டியையும் ரத்து செய்ய மத்திய அரசு சம்மதித்தது.

இந்நிலையில் 6 மாதத்திற்கான இஎம்ஐ சலுகை பெற்றவர்களைப் போலவே ஒழுங்காக வட்டி கட்டியவர்களுக்கும் சலுகை அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி 6 மாதம் ஒழுங்காக இஎம்ஐ கட்டியவர்களுக்குப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ₹50 லட்சம் ஒருவர் வீட்டுக்கடன் வாங்கி இருந்தால் அவருக்கு ₹12,425 கிடைக்கும். இந்தப் பணம் அவரது அக்கவுண்டில் முதலீடு செய்யப்படும். வீட்டுக் கடன், கல்விக் கடன், கிரெடிட் கார்டு, வாகன கடன் உள்பட 8 பிரிவுகளில் கடன் வாங்கியவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

More News >>