செஞ்சுரி அடித்த பின்னர் ஸ்டோக்ஸ் விரலை மடக்கி கையை தூக்கி காண்பித்தது ஏன்?

நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் செஞ்சுரி அடித்த பின்னர் பென் ஸ்டோக்ஸ் வலது கையை தூக்கி நடுவிரலை மடக்கி போஸ் கொடுத்தார். அது ஏன், எதற்காக அவர் அப்படி ஒரு போஸ் கொடுத்தார் என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.ஐபிஎல் போட்டியிலிருந்து எந்த நேரமும் வெளியேற்றப்படலாம் என்ற பரிதாப நிலையில் இருந்த ராஜஸ்தான் அணிக்கு தன்னுடைய அதிரடி செஞ்சுரியால் உயிர் கொடுத்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் 196 என்ற மிகப்பெரிய இலக்கை ராஜஸ்தானால் எட்ட முடியுமா என்ற கேள்வி முதலில் இருந்தது. ஆனால் பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து 152 ரன்களை குவித்து அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றனர். நேற்றைய போட்டியில் வெறும் 82 பந்துகளை மட்டுமே சந்தித்து இருவரும் சேர்ந்து 152 ஓட்டங்களைக் குவித்தனர். பென் ஸ்டோக்ஸ் 60 பந்தில் 14 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 107 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்றைய போட்டியில் பென் ஸ்டோக்ஸ் செஞ்சுரி அடித்தவுடன் வலது கையை தூக்கி நடுவிரலை மடக்கி போஸ் கொடுத்தார். அவர் ஏன் அப்படி நடுவிரலை மடக்கிக் காண்பித்தார் என ரசிகர்களுக்கு முதலில் புரியவில்லை. பின்னர் தான் அந்த சம்பவத்தின் பின்னணி தெரிய வந்தது. ஸ்டோக்சின் தந்தை சர்வதேச ரக்பி வீரர் ஆவார். ரக்பி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்த பென் ஸ்டோக்சின் தந்தை ஜெரார்த் ஸ்டோக்ஸ் பின்னர் இங்கிலாந்தில் குடியேறினார். அவர் ரக்பி விளையாடும் போது வலது கை நடுவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து அதைக் குணப்படுத்தலாம் என்று டாக்டர்கள் அறிவுரை கூறினர்.

ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் நீண்டநாட்கள் விளையாட முடியாது என்பதால் கைவிரலில் பாதியை அப்புறப்படுத்த அவர் தீர்மானித்தார். இதனால் அறுவை சிகிச்சை மூலம் பாதி விரல் துண்டிக்கப்பட்டது.இதன் பிறகு வழக்கம் போல அவர் ரக்பி விளையாடத் தொடங்கினார். இந்நிலையில் பென் ஸ்டோக்சின் தந்தைக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தான் ஐபிஎல் தொடக்கப் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

கண்டிப்பாக ஐபிஎல்லில் விளையாட வேண்டும் என்று தந்தை வற்புறுத்தியதால் தான்பின்னர் ஐபிஎல் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் வந்தார். தனது தந்தையை கௌரவப்படுத்துவதற்காகவே பென் ஸ்டோக்ஸ் கை விரலை மடக்கிக் காண்பித்தார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போதும் இதுபோல அவர் கை விரலை மடக்கிக் காண்பிப்பது உண்டு. அப்போது அதை யாரும் அதிகமாகக் கவனிக்கவில்லை. இப்போது தான் பென் ஸ்டோக்சின் கைவிரல் குறித்த தகவல் ரசிகர்களுக்குத் தெரியவந்துள்ளது.

More News >>