எங்கும் இருந்த ரத்தக் கறைகள்... சாத்தான்குளம் போலீஸின் மிருகத்தனத்தை சொல்லும் குற்றப்பத்திரிக்கை!
சாத்தான்குளம் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இவர்கள் இருவரையும் காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும் அப்போதே கொலையின் கொடூரங்கள் குறித்துப் பேசப்பட்டன. இதனால் சிறையில் அடைத்த சிலமணி நேரங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்நிலையில்தான், இவர்கள் இருவரும் அனுபவித்த சித்திரவதையை வெளிக்கொணரும்விதமாக புதிய காட்சிகள் வெளியாகியன. அந்த வீடியோயில் தந்தை, மகன் இருவரது பின்புறமும் கொடூரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பென்னிக்ஸின் பின்புறத்தின் தோல் உரிக்கப்பட்டுள்ளது பார்ப்பவர்களை அச்சத்தில் உறையவைக்கிறது.
இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் உள்ள தகவல்கள் சில இப்போது வெளியாகியுள்ளன. ``தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் பொய் குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காவல்நிலையத்தில் வைத்து இருவர் மீதும் சாத்தான்குளம் போலீஸார் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலால் இருவரின் உடலிலும் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. கூடவே, அதிகமான ரத்த கசிவும் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் சிந்திய ரத்தங்களை அவர்களையே துடைக்க சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளனர் போலீஸார். இதற்கு சான்றாக, காவல்நிலைய கழிப்பறை, சுவர்கள், லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை-மகன் இருவரது ரத்தங்கள் படிந்துள்ளது. இந்த ரத்தக் கறைகள் இறந்துபோன தந்தை, மகன் டிஎன்ஏ உடன் பொருந்தியுள்ளது மத்திய தடயவியல் துறையின் பரிசோதனையில் (CFSl) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே ரத்த மாதிரி ஜெயராஜ் மனைவி செல்வராணி DNA உடனும் பொருந்துகிறது. ரத்தக் கறைகளை சேகரிக்கும் முன்பாகவே, தடயங்களை காவல்துறையினர் அழிக்க முயன்றுள்ளனர்.
காவல் அதிகாரிகள் மட்டுமல்ல, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா தந்தை, மகனை பரிசோதனை செய்தபோது அலட்சியமாக செயல்பட்டு இவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை சான்றிதழில் குறிப்பிடாமல் அலட்சியமாக செயல்பட்டு, சிறைக்கு அடைக்க இவர்கள் தகுதியானவர் என தகுதி சான்றிதழ் கொடுத்துள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.