தோஹா விமான நிலையத்தில் பிறந்த சிசு தாய் யாரென்று கண்டுபிடிக்க பெண்களை நிர்வாணப்படுத்தி பரிசோதனை

தோஹா விமானநிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தையின் தாய் யாரென்று கண்டுபிடிப்பதற்காக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 13 இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கத்தாரில் உள்ள தோஹாவில் ஹமத் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் கத்தாரில் இருந்து ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னிக்குப் புறப்படுவதற்காக ஒரு விமானம் தயாராக இருந்தது. அதில் செல்வதற்காகப் பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது திடீரென விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 13 இளம்பெண்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். எதற்காக அழைத்துச் செல்கிறீர்கள் என அவர்கள் கேட்டும் அதிகாரிகள் எந்த பதிலும் கூறவில்லை.அவர்களைத் தனி அறைக்குக் கொண்டு சென்ற அதிகாரிகள் கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களைத்து நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்தனர். பின்னர் நீண்ட நேரத்திற்குப் பின்னரே அவர்கள் அனைவரையும் அதிகாரிகள் விடுவித்தனர்.

இந்த சம்பவம் விமான தோஹா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காகப் பெண் பயணிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் முதலில் எதுவும் தெரிவிக்கவில்லை.பின்னர் தான் அந்த விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்த ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அந்த குழந்தையின் தாய் யார் என்பதைக் கண்டு கண்டுபிடிப்பதற்காகவே ஆடைகளை களைந்து பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் தெரியவந்தது. தோஹா விமான நிலைய அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளுக்கு நடந்த இந்த சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்த தவறை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே அந்த குழந்தையின் தாய் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. அந்த குழந்தை குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

More News >>