முகம்மது நபி குறித்த கார்ட்டூன் பிரான்சுக்கு எதிராக அரபு நாடுகளில் போராட்டம்

முகமது நபி குறித்த கார்ட்டூனை பயன்படுத்திய பிரான்சுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் வலுத்துள்ளது. குவைத், சவுதி அரேபியா உட்பட நாடுகளில் பிரெஞ்சு பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.சமீபத்தில் பிரான்சில் உள்ள ஒரு பள்ளியில் முகமது நபியின் கார்ட்டூனை வைத்து சாமுவேல் பாட்ரி என்ற ஆசிரியர் பாடம் நடத்தியதாக கடும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் ஆசிரியர் சாமுவேல் பாட்ரி பள்ளி அருகே வைத்து பட்டப்பகலில் மாணவர்கள் முன்னிலையில் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரியரைக் கொன்ற நபரை போலீசார் பின்னர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பிரான்சில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று பிரான்ஸ் அரசு கூறியது.

இந்நிலையில் முகமது நபியின் கார்ட்டூனை பயன்படுத்திய விவகாரம் மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சுக்கு எதிராக இந்த நாடுகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனை கண்டித்து போராட்டங்கள் நடந்தன. அவரது உருவப் படங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. குவைத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனங்களைப் புறக்கணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனமான காரபோரை புறக்கணிக்க வேண்டுமென்று என்ற ஹாஷ் டாகுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டுத் தூதருடன் குவைத் வெளியுறவுத் துறை அமைச்சர் அகமது நாசர் அல் முஹம்மது அல் சாபா பேச்சுவார்த்தை நடத்தினார். பாரிசில் நடந்த ஆசிரியர் கொலை ஒரு மோசமான குற்றம் என்று அவர் கண்டித்த போதிலும், முகமது நபிக்கு எதிராகப் பரப்பப்படும் கருத்துக்களைத் தடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குவைத் தவிரத் துருக்கி, கத்தார், ஜோர்டான் உள்பட நாடுகளிலும் பிரான்சுக்கு எதிராகக் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகின்றன.

பிரான்ஸ் நாட்டுக்கான விமான டிக்கெட் முன்பதிவை இந்நாட்டிலுள்ள டிராவல் ஏஜென்சிகள் நிறுத்தி வைத்துள்ளன. இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகளில் பிரான்சுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தேவையில்லாத ஒன்று என்றும், தங்களது நாட்டு மக்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

More News >>