முடக்கப்பட்ட பிடிஐ சேவை: ஹாக்கர்கள் அட்டகாசம் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி முகமையின் கணினி சேவை பாதிப்பு
செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சந்தாதாரர்களுக்குச் செய்திகளை அனுப்புகிறது. கடந்த சனிக்கிழமை இரவு இதன் கணினி செயல்பாட்டை ஹாக்கர்கள் முடக்கியதால் சேவை தடைப்பட்டது.பணய தொகை கேட்டு ஹாக்கர்கள் இணையதளங்களை முடக்குவர். அதேபோன்று பிடிஐயின் கணினி சேவையும் முடக்கப்பட்டதாகத் தெரிகிறது. லாக்பிட் (LockBit) என்ற ஆபத்தான மென்பொருளைக் கொண்டு பிடிஐ கணினிகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த மென்பொருள் தொடர்பு கொள்ளக் கூடிய அனைத்து கணினிகளின் செயல்பாட்டையும் முடக்கவல்லது.இது முன்பு 'ஏபிடிசி' ரான்சம்வேர் என்று அழைக்கப்பட்டது. இதே மென்பொருளைக் கொண்டு முன்பு அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா, இந்தோனேசியா, உக்ரேன், பிரான்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலுள்ள கணினி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.சனிக்கிழமை இரவு நடந்த இந்த தாக்குதலுக்காகப் பணய தொகை எதுவும் கொடுக்கப்படவில்லையென்றும் பிடிஐ எஞ்ஜினியர்கள் போராடி ஞாயிற்றுக்கிழமை காலை சேவைகளைத் தொடரச் செய்தனர் என்றும் கூறப்படுகிறது.