200 சிசிடிவி கேமரா ஆய்வுக்கு பின் சிக்கிய குற்றவாளி... போலீஸுக்கு காத்திருந்த `எஸ்.ஐ அதிர்ச்சி!
கடந்த சில நாட்களாக, தென்மேற்கு டெல்லியின் துவாரகா காவல்நிலையத்துக்கு தொடர்ச்சியாக நான்கு பெண்களிடமிருந்து ஒரே மாதிரியான பாலியல் தொந்தரவு புகார்கள் வந்தன. அதில் ஒரு பெண் மைனர். அந்த பெண்கள் அளித்த புகாரில், காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை சாம்பல் நிற பலேனோவில் வந்த ஒரு நபர் தங்களை பின் தொடர்ந்து வருகிறார் என்று கூறப்பட்டது.
ஒரு பெண் அளித்த புகாரில், ``நான் சைக்கிளில் செல்லும்போது பலேனோ கார் ஒன்று என் அருகில் வந்தது. காரில் இருந்து நபர் எனக்கு வணக்கம் செலுத்தி, துவாரகாவில் உள்ள செக்டர் -14 க்கு வழி கேட்டார். நான் வழி சொல்ல சென்றபோது, அந்த நபர் தனது கால்சட்டைகளை அவிழ்த்து அவரது தனிப்பட்ட பாகங்களைத் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார். சில நொடிகளில் அவர் மீது கோபமடைந்து கிளம்ப சொன்னேன். ஆனால் அந்த நபர் கிளம்பாமல், மோசமான விஷயங்களைச் சொல்லத் தொடங்கினார். பின்பு நான் கத்தி உதவிகேட்க அங்கிருந்து தப்பி ஓடினார் அந்த நபர்" என்று கூறப்பட்டது.
தொடர்ச்சியாக இதுபோன்ற புகார்கள் வர, இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர் துவாரகா போலீஸார். விசாரணையில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. அதன்படி குற்றவாளியை கண்டுபிடிக்க, 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போலீஸார் தொடர்ச்சியாக இது போன்ற செயல்களை செய்துவந்த அந்த நபர் நம்பர் பிளேட் இல்லாத காரை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்தக் காருக்கு சொந்தக்கராரும் இந்த மோசமான செயல்களில் ஈடுபட்டது டெல்லி காவல்துறையைச் சேர்ந்த எஸ்.ஐ புனீத் கிரேவல் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை உடனடியாக கைது செய்த போலீஸார், போக்ஸோ சட்டம் உட்பட நான்கு தனித்தனியான வழக்குகள் அவர் மீது பதிவு செய்தனர்.