மறுமுறை பிறந்து வா நாங்கள் காத்திருக்கிறோம் சுஜித்.... அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி ஆகியோரின் 2 வயது குழந்தை சுஜித்வில்சன். கடந்த வருடம் இதேமாதம் 25ம் தேதி மாலையில் வீட்டுக்கு வெளியே உள்ள நிலத்தில் உள்ள விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். குழந்தையை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் என்று வரிசையாக வந்து 25ம் தேதி மாலை முதல் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர். குழந்தை சுவாசிப்பது அவ்வப்போது உறுதி செய்யப்பட்டது. மறுநாள் காலை வரை குழந்தையின் சுவாசம் தெரிந்தது. அதன்பிறகு, ஆழ்துளை கிணற்றுக்குள் மண் சரிந்ததால், குழந்தை கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கி 88 அடி ஆழத்தில் நின்றது. இதன்பிறகு, ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. இப்படியாக நான்கு நாட்களுக்கும் மேலாக போராடினர்.

ஆனால் போராட்டமே மிஞ்சியது. கடந்த வருடம் இதேமாதம் இதே தேதியில் உயிரிழந்தான் சிறுவன் சுஜித். இதற்கிடையே, சிறுவன் சுஜித் இறந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாள் முதல் களத்தில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இதுதொடர்பாக உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ``சுஜித்,மீண்டு வருவாய் என கோடானுகோடி பிரார்த்தனைகளை புறந்தள்ளி புதைந்துபோன கருப்பு நாள் இது. ஊண் உறக்கமின்றி உனக்காகஉறுதியோடு காத்திருந்த எங்களை கண்ணீரில் மூழ்க வைத்து நீ மறைந்து போனது மாளாத சோகமாய் மனதில் இருக்கிறது! மறுமுறை பிறந்து வா நாங்கள் காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

More News >>