கொரோனா: குளோஸ் கான்டாக்ட் என்பது எவ்வளவு தெரியுமா?

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று சமூக விலகல். கோவிட்-19 கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்குத் தொற்றுள்ளவரை நெருங்காமல் இருப்பதே முக்கியம். கொரோனா குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை குறிப்புகளும் மாற்றப்பட்டுக்கொண்டே உள்ளன.

குளோஸ் கான்டாக்ட்

கொரோனா தொற்றுள்ள நபரோடு நெருக்கமாக இருக்கக்கூடிய சந்தர்ப்பமே நோய் பரவுவதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. அதற்காகவே பொது போக்குவரத்து, கடைவீதி, விழாக்கள் இவற்றைக் கூடுமானவரைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமாயின் அவர் யாருடனெல்லாம் நெருங்கிப் பழகுவதற்கு வாய்ப்புள்ளதோ அவர்களுக்கும் தொற்றுக்கான சோதனை செய்யும்படி ஆலோசனை கூறப்படுகிறது. வீடு மற்றும் அலுவலகத்தில் தொற்றுள்ளவர் யாருடனெல்லாம் பழகியுள்ளார் என்பதைக் கண்டறிந்து 'தொடர்பு' (contact tracing) பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

எல்லை

முன்னர், நோய்த் தொற்றுள்ளவருடன் ஆறு அடி தூரத்திற்குள் 15 நிமிட நேரத்தைச் செலவழித்திருந்தால் அது 'நெருங்கிய தொடர்பு' (குளோஸ் கான்டாக்ட்) என்று வகுக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று ஏற்பட்டவருடன் 24 மணி நேரத்திற்குள் மொத்தத்தில் 15 நிமிடம் நெருங்கியிருப்பவர் 'குளோஸ் கான்டாக்ட்' எனப்படுகிறார்.

நோய்த் தொற்றுள்ளவருக்கு அறிகுறிகள் தென்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு மற்றும் நோய்த் தொற்றுள்ளவர் பரிசோதனை மாதிரி கொடுத்ததற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு என்று வரையறை செய்து அப்போதிருந்து அந்நபர் யாருடனெல்லாம் நெருங்கிப் பழகியுள்ளாரோ அவர்களெல்லாம் நெருங்கிய தொடர்பாகக் கருதப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

எட்டு மணி நேர பணிவேளையில் இருந்த 20 வயது இளம்பெண் ஒருவர் மொத்தம் 22 முறை இன்னொருவரை நெருங்கி பணியாற்றியுள்ளார். வெவ்வேறு நபர்களுடன் அவர் நெருங்கி பணியாற்றிய மொத்த நேரமே 17 நிமிடங்கள்தான். ஆனால், அப்பெண்ணுக்கு கோவிட்-19 பாஸிட்டிவ் என்று தெரிய வந்துள்ளது. இதுபோன்ற தரவுகளின் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள் மொத்தமாக 15 நிமிடம் ஆறு அடி தொலைவுக்குள் இருந்தால் அது 'நெருங்கிய தொடர்பு' (குளோஸ் கான்டாக்ட்) என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

More News >>