ஊழல் நிதிஷ்குமாரை சிறைக்கு அனுப்புவேன்.. சிராக் பஸ்வான் பேச்சு.. பாஜக கூட்டணியில் பனிப்போர்..
நான் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமாரை சிறைக்கு அனுப்புவேன் என்று சிராக் பஸ்வான் பேசியது, பாஜக கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முதல் கட்டத் தேர்தல் நாளை(அக்.28) நடைபெற உள்ளது. நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் அடுத்த கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அங்கு ஆளும் கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் இதர கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
அதே சமயம், சிராக் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி, கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள அந்த கட்சி, பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. இதனால், பாஜக மறைமுகமாக நிதிஷ்குமாருக்கு நெருக்கடி கொடுப்பதாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிராக் பஸ்வான் தனது பிரச்சாரத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும், நிதிஷ்குமாரையும் விமர்சித்து வந்தார். முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரம் முடியும் தருணத்தில் அவர், நிதிஷ்குமாரை கடுமையாகத் தாக்கினார். அவர் அளித்த பேட்டியில், நிதிஷ்குமார் கொண்டு வந்த ஏழு அம்சத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. அதில் அவருக்கும் பங்கு உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் அவரை சிறைக்கு அனுப்புவேன். அக்.28ம் தேதிக்குப் பிறகு நிதிஷ்குமார் நிச்சயமாக முதல்வராக இருக்க மாட்டார். அவர் ஊழல் செய்தது நிரூபணமானால், அவருக்குச் சரியான இடம் ஜெயில் தானே என்று கூறியிருக்கிறார்.
இது ஐக்கிய ஜனதாதளம் கட்சியினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்ட் கிளீன் இமேஜ் உள்ள நிதிஷ்குமாரை சிராக்பஸ்வான் இப்படித் தாக்குவதற்கு பாஜக கொடுக்கும் துணிச்சல்தான் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். நிதிஷ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறுகையில், நிதிஷ்குமாரை ஊழல் செய்தார் என்று கூறினால், நாட்டில் எல்லோருமே ஊழல் செய்தவர்கள் என்று சொல்வது போலாகும். சிராக் பஸ்வான் பேச்சு முறையற்றது என்றார்.
பாஜக மாநில தலைவர் சஞ்சய் ஜெயஸ்வால் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டு எதையுமே சந்திக்காதவர் நிதிஷ்குமார் என்றார். அதே சமயம், கர்நாடக பாஜக எம்.பியான தேஜஸ்வி சூரியா, பீகாரில் பிரச்சாரம் செய்யும் போது சிராக் பஸ்வானை புகழ்ந்து பேசினார். இதனால், தற்போது ஜேடியு- பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது.