பாலேஸ்வரம் கருணை இல்லம் விவகாரம்: முதியவர்களை ஒப்படைக்க அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட அனைத்து முதியவர்களையும் கருணை இல்லத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் உள்ள முதியவர்கள் இறந்த பிறகு அவர்களது சடலங்களை விற்பனை செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைதொடர்ந்து, இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, கருணை இல்லத்தில் இருந்து மொத்தம் 294 முதியவர்களில் 12 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ளவர்களை மீட்டு பல்வேறு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்ட முதியோரை மீட்கும்படி இல்ல நிர்வாக இயக்குனர் தாமஸ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி பின்னர் பிறப்பித்த உத்தரவில், “வருவாய்த்துறை அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்ட அனைத்து முதியவர்களையும் கருணை இல்லத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். சமூக நல அதிகாரி நாளை நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ” என்றார்

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>