விஜயதசமி ஸ்பெஷல்..! ஆட்டம்.. பாட்டம்.. ஒரே கொண்டாட்டம் தான் போங்க.. பிக் பாஸ் வீட்டின் 23வது நாள்..
மண்ணு மணக்குற பாட்டு போட்டாங்க. காலங்கார்த்தால குத்தாட்டம் போட முயற்சி செஞ்சுட்டு இருந்தாங்க. என்னிக்கும் இல்லாம இன்னிக்கு எல்லாரும் வித்தியாசமா தெரிஞ்சாங்க. அப்புறம் தான் தெரிஞ்சுது எடிட்டிங்ல க்ளோசப்ல எல்லார் முகத்தையும் காமிச்சுருக்கான் போலருக்கு. யப்பா காலைல எல்லாரையும் லாங் ஷாட்லேயே காமிச்சுருப்பா.. பயந்து வருது.
பல்லு விளக்கறிங்களோ இல்லையோ முதல்ல நாமினேஷன் பண்ணுங்கனு சொல்லிட்டாரு பிக்பாஸ். போன வாரம் எல்லாரும் கொஞ்சம் அமுக்குனிகளா மாறிட்டதால பொதுவான கண்டஸ்டண்ட் யாரும் சிக்கலை. அதனால எல்லாரும் அவங்கவங்க பர்சனல் எதிரியை அல்லது அப்படி நினைச்சுக்கறவங்களை நாமினேட் செய்ய ஆரம்பிச்சாங்க. இந்த முறை நாமினேஷன்ல அவங்க போட்டோவை எடுத்து காரணம் சொல்லிட்டு நெருப்புல போடனும். எதுக்கு பிக்பாஸ் இது...
எல்லாரும் எல்லார் பேரையும் சொன்னதால ஹவுஸ்மேட்ஸ் 11 பேர் நாமினேட் ஆனாங்க. எதிர்பார்த்தா மாதிரியே பாலா பேரை தான் நிறைய பேர் சொன்னாங்க. அதிகம்னா வெறும் 4 பேர் தான். சோம், ரியோ, நிஷா, அர்ச்சனா.. குரூப். அடுத்து எல்லாரும் ரெண்டு ஓட்டு தான் வாங்கினாங்க. ரமேஷும் நிஷாவும் சுரேஷ் பேரை சொன்னாங்க. சம்முவும், கேப்பியும் அனிதா பேரை சொல்ல, அனிதா இவங்க ரெண்டு பேரையும் தான் சொன்னாங்க. எப்படி கரெக்டா கணிச்சுருக்காங்க.
இப்படி மொத்த பேரையும் சொல்லி கன்ப்யூஸ் பண்ணதால மொத்த பேரும் நாமினேஷனுக்கு அனுப்பிட்டாரு பிக்பாஸ். சுரேஷும் அர்ச்சனாவும் இந்த வாரம் யார் போவாங்கனு டிஸ்கஷன்ல இருந்தாங்க. அதான் நாமினேஷன் முடிஞ்சுருச்சுல்லனு நினைச்சு பாலா பக்கம் போய் உக்காந்தாரு வேல்ஸ். இந்த வாரம் நீங்க தான் போவீங்கனு வேல்ஸ்கிட்ட ஒரு குண்டை தூக்கி போட்டாரு பாலா. அடப்பாவி, உன்பக்கத்துல வந்து உக்காந்தது ஒரு குத்தமாடானு ரியாக்சன் கொடுத்தாரு வேல்ஸ். பத்தாததுக்கு அந்த பக்கம் சனம் வர, இவங்க நினைச்சா தான் உங்களை காப்பாத்த முடியும்னு கொளுத்தி போடவும், வேல்ஸ்க்கு ஒன்னும்புரியலை. ஆனா சனம்க்கு புரிஞ்சுருச்சு.
விஜயதசமி கொண்டாட்டங்கள் தொடங்கியது. அனிதா தான் இந்த நிகழ்ச்சியோட தொகுப்பாளர். கொஞ்சம் கஷ்டம் தான். வேற வழி இல்லை. என்ன செய்யறது? .. முதல்ல ஆளுக்கு ஒரு பொம்மையும், கலர் பெயிண்டும் கொடுத்தாங்க. கூடவே ஒரு போட்டோவும். அந்த போட்டோவை பார்த்து கலர் செய்யனும். எல்லாரும் மும்முரமா கலர் பண்ணிட்டு இருக்க அதையும் தொகுத்து வழங்கினாங்க அனிதா. பாலாஜியும், ஷிவானியும் ஒரு ஓரமா உக்காந்து கலர் பண்ணிட்டு இருந்தாங்க. எவ்வளவு சவுண்ட் வச்சும் அவங்க பேசினது கேக்கவும் இல்லை, புரியவும் இல்லை. கூடிய சீக்கிரம் அந்த சீனை டிகோடிங் பண்ணி எழுதறேன்.
ஷிவானி யார் கூடவும் பேசாம இருந்தாலும் கேம்ல எவ்வளவு கான்சண்ட்ரேஷனோட இருக்குனு தெரிய வந்தது. வெளிய போட்டோ வச்சு நாமினேட் செய்ய சொன்னாங்க இல்லையா? பாலா அதை பத்தி பேசிட்டு இருக்கும் போது, அந்த போட்டோவை எண்ணி பார்த்திருந்தா அடுத்த கட்டமா சமையலுக்கு தேவையான பொருள் வந்தது. கிராமம் vs நகரம் டீம் பிரிச்சு ஆளுக்கு ஒரு டிஷ் சமைச்சாங்க. கிராமம் டீம் கேசரி செய்ய, நகரம் டீம் பாயாசம் செஞ்சாங்க. அனிதா தான் நடுவர். சாப்பாட்டு பார்த்துட்டு கேசரில சர்க்கரை அதிகம்னு நகரம் டீம் தான் ஜெயிச்சதா சொல்லிட்டாங்க.
அப்புறமா பாயாசத்தை டேஸ்ட் பார்த்த சுரேஷு, இதுல ஒரே மண்ணா இருக்குனு சொல்லிட்டு ஓடியே போய்ட்டாப்புல... அடுத்து 7 ஸ்டோன்ஸ் விளையாட்டு. எல்லாரும் திப்புடு திப்புடுனு ஓடினதை பார்க்க பயமா தான் இருந்தது. தன் வீட்டுல இருக்கறவங்களுக்கு வாழ்த்து சொன்னாங்க. வீட்டுல இருக்கற பெண்கள் பத்தி ஆண்கள் புகழ்ந்து பேசனும். டிபிக்கல் விஜய் டிவி கண்டண்ட். சம்முவை அம்மானு சொல்லிட்டு போனான் ஆஜித். ஏற்கனவே ஷிவானியும் இதையே சொன்னது நினைவிருக்கலாம். சம்மு சைலண்டா முன்னாடி வந்துட்டு இருக்காங்க.
வேல்ஸ் 4 பாட்டு பாடினாரு. சுரேஷ் வந்தவரு அஷ்டலஷ்மினு சொல்லிட்டு அனிதாவை மட்டும் டூப்ளிகேட்னு சொன்ன போதே, இன்னிக்கு இருக்குடா ஒரு பஞ்சாயத்துனு தோணுச்சு. கார்டன் ஏரியால ஒரு மேடை போட்ருந்தாங்க. அங்க தான் ரெண்டு டீமும் பர்பாமன்ஸ் கொடுக்கனும். அதுக்கு முன்னாடி அவங்க பெயிண்ட் செஞ்ச பொம்மையெல்லாம் கொடுக்கப்பட்ட இடத்துல வச்சாங்க. ஒரு பானையில அரிசி போட சுமங்கலி யாராவது வாங்கனு கூப்பிடவும் அனிதா முன்னாடி வந்தாங்க. குலவையெல்லாம் போட்டு அந்த பானையை பயபக்தியோட வைச்சாங்க.
முதல்ல பேச்சு. ரம்யா நகரம் சார்பாவும், ஆரி கிராமம் சார்பாகவும் பேசினாங்க. இவங்க பேசி முடிச்சு கீழ இறங்கின உடனே நடுவரா இருந்த அனிதா நகரம் சார்பா ரெண்டு பாயிண்ட் சொன்ன போது தான் சலசலப்பு வந்தது. நகரத்துல சாதி பார்க்கலை. அதே மாதிரி சுரேஷ் சார் இங்க சுமங்கலியை கூப்பிட்டு விளக்கேத்த சொன்னாரு. நகரத்துல அந்த பழக்கம் குறைவு தான். அப்படி யாரும் பார்க்க வேண்டியதில்லை. ஒருவேளை நான் சுமங்கலியா இல்லாம இருந்தா இந்த வாய்ப்பு கிடைக்குமா? னு கேட்டுட்டு இறங்கிட்டாங்க. அப்பவே சுரேஷ் முகம் மாறிடுச்சு.
அதுக்கப்புறம் கேப்பியும், ஷிவானியும் டான்ஸ் பர்பாமன்ஸ் கொடுத்தாங்க. நகரம் டீம் சார்புல பிக்பாஸ் ஸ்பூப் நாடகம் ஒன்னு போட்டாங்க. சோம் தான் பிக்பாஸ் குரல்ல பேசிட்டு இருந்தார். அடுத்து கிராமம் சார்புல கல்வியா செல்வமா வீரமானொருசின்ன நாடகம். நிஷாவும், வேல்ஸும் அதை பாட்டுலேயே சொல்ல அர்ச்சனா, கேப்பி, சம்மு நடிச்சு காமிச்சாங்க. அர்ச்சனாவோட ஆக்டிங் சூப்பர். அதே மாதிரி சுரேஷும் அட்டகாசம் பண்ணினார். அதுக குரூப்ல டூப்பூ ஆரி தான். சட்டையை கூட கழட்ட முடியாதய்யா...
ஒரு வழியா பர்பாமன்ஸ் எல்லாம் முடிஞ்சு கொஞ்சம் நீண்ட ரெஸ்ட் கிடைக்கும் போது தான் சுரேஷ் பிரச்சினையை ஆரம்பிக்கறாரு. சுரேஷ் பேரை ரெபரன்ஸ் எடுத்து பேசினது அவருக்கு சுத்தமா பிடிக்கல. அதனால தன் பேருக்கு களங்கம் வரும்னு அவருக்கு ஒரு சிந்தனை. கூடவே சபைல அனிதா அப்படி பேசினது தப்புனு அவரோட எண்ணம். நிஷா கிட்ட பேசும் போது அனிதா ஆங்கரிங் தொழிலுக்கே மோசம் செஞ்சா மாதிரி பேசறாரு. நியூஸ் ரீடர்ஸ் பத்தி நான் பேசினதா சொன்னாங்களே, இப்ப இவங்க செஞ்சதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டுட்டு இருந்தாரு.
அனிதா பேசும் போது தன்னையே உதாரணமா காட்டி பேசினாங்க. அது தப்புனு ரியோ, ஆரி, நிஷா மூணு பேரும் அனிதாவுக்கு விளக்கம் கொடுத்துட்டு இருந்தாங்க. ஒரு பக்கம் சுரேஷ், இந்த விஷயத்தை சம்மு, அர்ச்சனா, ரியோ கிட்ட பேச, அந்த பக்கம் அனிதாவும் இதை பத்தி பேசிட்டு இருந்தாங்க. ரம்யா, ஷிவானி, சம்மு டீமா உக்காந்து, இதுல தப்பு சொல்ல என்ன இருக்கு, அனிதா பேசினது நியாயம் தானேனு பேசிட்டு இருந்தாங்க. அடுத்து மறுபடியும் ஒரு டாஸ்க். அப்ப அங்க வந்த சுரேஷ் ஒரு சேர்ல உக்கார போக, அதை அனிதா கால்ல நகத்திருக்காங்க போல. அதுவும் சுரேஷை ஹர்ட் செய்ய இன்னும் கோபமா பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சாரு. . ஒரு வழியா அவரை சமாதானபடுத்தி அந்த டாஸ்க் நடந்தது...
அனிதா பேசினது சரியானு ஒரு கேள்வி முதல்ல வரும். அனிதா இந்த நிகழ்ச்சிக்கு நடுவர், தொகுப்பாளர். அப்படியிருக்கும் போது ஒரு அணி சார்பா தன்னோட கருத்தை முன் வைக்கறது தவறு. அதுவும் இல்லாம நடுவர் / தொகுப்பாளர் அதிகாரம் இருந்ததால தான் அந்த மேடையை அவங்களே எடுத்துகிட்டாங்க. குறைந்தபட்சம் எல்லாரும் பேசி முடிச்சு நிகழ்ச்சியை முடிச்சு வைக்ககும்போது இந்த பாயிண்ட்ஸ் சொல்லிருந்தா கூட ஒரு நியாயம் இருக்கும். ஆனா அனிதா அப்படி செய்யாதது முதல் தவறு. தனக்கு தோணின ஒரு விஷயத்தை இடம், பொருள் பார்க்காம உடனே பதிவு செஞ்சதை பார்க்கும் போது, கிடைச்ச வாய்ப்புல ஸ்கோர் செய்யனும்னு ஆசைப்பட்ட அனிதா தான் நமக்கு தெரிஞ்சாங்க.
அடுத்து அவங்க சொன்ன விஷயம். சுரேஷை ரெபரன்ஸ் செஞ்சு உள்நோக்கத்தோட பேசினாங்களா என்பது தான் இங்க முக்கியமான கேள்வி. ஆனா இதுக்கு கலவையான பதில் தான் கிடைக்கும். ஆரம்ப நாட்கள்ல சுரேஷுக்கும், அனிதாவுக்கும் பிரச்சினையை தாண்டி நேரடி மோதல் எதுவும் இல்லை. ஆனா மதியம் பெண்களை பாராட்டி பேசற டாஸ்க்ல, அனிதாவை காலை வாரினது சுரேஷ் தான். அதுக்கு பழிவாங்க இதை செய்தார்னு கூட சொல்ல முடியும். ஆனா என்னோட தனிப்பட்ட அனுமானத்தை பொறுத்த வரைக்கும் அந்தளவு அறிவுத்திறன் அனிதாவுக்கு இல்லைனு தான் சொல்லுவேன்.
ஒருவேளை அனிதா இதை உள்நோக்கத்தோட செஞ்சுருக்காங்கனு வச்சுப்போம். அதாவது சுரேஷை பழிவாங்கனும், அதே சம்யம் தானும் ஸ்கோர் செய்யனும்னு நினைச்சு, வாய்ப்புக்காக காத்திருந்து இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிருக்காங்கனு வச்சுப்போம். அப்படி செஞ்சாலும் இந்த விஷயத்தை பொறுத்தவரைக்கும், வெற்றி வாய்ப்பு 50% சதவிகிதம் தான். இப்ப சுரேஷ் ரியாக்ட் செஞ்சதால தான் இதை பத்தி நாம பேசறோம். இல்லேன்னா இந்த சம்பவத்தை எல்லாரும் கடந்து போயிருப்பாங்க. நாம மேல சொன்னா மாதிரி அனிதா அந்தளவு புத்திசாலியானு கேட்டா, நோ தான் பலரோட பதிலா இருக்கும்.
அனிதா பேசினது முற்போக்கான விஷயம். சுரேஷ் பேரை அதுல ஒரு தடவை யூஸ் பண்றாங்க. மத்தபடி அவங்க சொல்ல வந்த விஷயத்துல தன்னை பொருத்தி பார்த்து தான் சொல்றாங்க. அதை தான் ஆரி, ரியோ, நிஷா சுட்டிகாட்டறாங்க. சுரேஷ் பேர் சொன்னதை தவிர அவங்க சொன்ன விஷயம் வரவேற்க கூடியதே. இதை ஹவுஸ்மேட்ஸ்ம் ஒத்துகிட்டாங்க.
தன் பேரை சொன்னதை சுரேஷ் அப்ஜக்ட் செய்யற வரைக்கும் அது தப்புனு எந்த ஹவுஸ்மேட்ஸும் சொல்லலை. அதே மாதிரி இது விஷயமா அனிதா கிட்ட பேசும் போதும் சுரேஷ் பேரை சொன்னது தப்புனு அவர் ஃபீல் செய்யறதா தான் சொன்னாங்களே தவிர, அனிதா செஞ்சது தப்புனு யாரும் சொல்லலை. இன்னொரு பாயிண்ட் யோசிச்சா இந்த சம்பவம் தொடர்பா அனிதா கிட்ட பேசினது ரியோ, நிஷா தான். அவங்க ஏற்கனவே சுரேஷுக்கு எதிரான குரூப்னு ஆர்கியூ செய்யலாம். பாலா சொன்னதை கணக்குல எடுத்துக்க வேண்டியதில்லைனு நினைக்கிறேன். காரணம் பாலா அனிதாவை தூண்டி விடறாருனு மட்டும் இப்போதைக்கு தெரியுது. சோ சுரேஷ் தன்னோட ஆட்சேபனையை தெரிவிக்கலேன்னா இந்த சம்பவம் இவ்வளவு பேசபட்டிருக்காது.
அனிதாவுக்கு இதுல உள் நோக்கம் இருக்குமோனு சந்தேகப்படறா மாதிரி சுரேஷுக்கு இதுல உள் நோக்கம் இருக்குமோனு சந்தேகபட வேண்டியதும் நம்மோட கடமை. ஒரு வாய்ப்புக்காக காத்திருந்து அந்த வாய்ப்பு வந்த உடனே அதை கெட்டியா பிடிச்சு அதுல ஸ்கோர் செய்யறது அனிதாவோட வழக்கம். சனம் கூட இதையே தான் செஞ்சாங்க. ஆனா சுரேஷ் அப்படியில்லை. இல்லாத ஒரு வாய்ப்பை உருவாக்கி, அதுல எகோர் செய்யக்கூடிய அளவுக்கு அவர் புத்திசாலி. பிக்பாஸ் பார்க்கற யாரும் இதை மறுக்க மாட்டாங்கனு நினைக்கிறேன். அப்படி உருவாக்கப்படும் வாய்ப்பா இந்த சம்பவம் இருக்கவும் வாய்ப்பிருக்கு. இதுக்கு முன்னாடி சுரேஷ் அப்படி செஞ்ச சம்பவங்களும் இந்த சீசன்ல இருக்கு. தனக்கு ஆதாயம் இருக்கோ இல்லையோ கொளுத்தி போடறதை தன் வாடிக்கையா வச்சுருக்காரு.
எந்த சண்டைனாலும் நேரடியா எதிர்கொள்ளும் சுரேஷ், இதுல எடுத்த உடனே மத்த ஹவுஸ்மேட்ஸ் கிட்ட தான் பேசறாரு. போன வாரம் தன்னை பத்தி தனக்கு பின்னாடி பேசின சனமை வகுந்துடுவேன்னு நேரடியா மிரட்டினவரு, இப்ப ஏன் நேரடியா பேசலைனு ஒரு கேள்வி வரும். பேஷன் ஷோல தன் பெயர் ரெபரன்ஸ் செய்யப்பட்ட போது ரியோ, அதை அப்போதே எதிர்த்து தன் கோபத்தை பதிவு செய்ததை நாம் பார்த்தோம். பட்டி மன்ற தீர்ப்புல தன்னை குழந்தைனு ரெபரன்ஸ் பண்ணினதுக்கு பாலாஜி காட்டிய கோபமும் நாம பார்த்துருக்கோம்.
இந்த ரெண்டு சம்பவத்திலும் பாலா மற்றும் ரியோவோட கோபம் தேவையில்லாததுனு தான் பதிவு பண்ணிருக்கோம். அதே போலத்தான் இந்த சம்பவமும். சுரேஷோட கோபம் தேவையில்லாததுனு தான் தோணுது.