மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் கலந்தாய்வு மூலம் நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள 15% எம்பிபிஎஸ்,பிடிஎஸ் இடங்களில் தமிழகத்தில் 547 எம்பிபிஎஸ் இடங்களும், 15 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.
அந்த இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு www.mcc.nic.inஎன்ற இணையதளம் மூலம் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் நடத்தவுள்ளனர்.
நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ- மாணவிகள் இன்று முதல் நவ. 2-ம் தேதி மாலை 5 மணி வரை நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்விற்குப் பதிவு செய்து கல்லூரியைத் தேர்வு செய்து அதனை நவம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.
நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் தரவரிசை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த விவரங்கள் நவம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும். அதனையடுத்து நவம்பர் 6-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.மேலும் 2-ம் கட்ட கலந்தாய்வுக்காக நவம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.