3 வயது குழந்தையை கடத்தியதாக புகார், 241 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய ரயில் கடைசியில் ட்விஸ்ட்

உத்திர பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியை ரயிலில் கடத்திய ஆசாமியை பிடிப்பதற்காக 241 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் நிறுத்தாமல் கொண்டு செல்லப்பட்டது. கடைசியில் அந்த சிறுமியைக் கடத்தியவரைக் கண்டுபிடித்த ரயில்வே போலீசார், அவர் யார் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது லலித்பூர். இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களது வீடு லலித்பூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் வழக்கம். இப்படித் தான் நேற்றும் வழக்கம் போலத் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மனைவிக்குத் தெரியாமல் கணவன் மகளை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். சிறிது நேரம் கழித்துப் பார்த்த போது மகளையும், கணவனையும் காணவில்லை. கணவன் தான் குழந்தையைக் கொண்டு சென்றிருப்பார் என அவருக்கு நன்றாகத் தெரியும்.உடனடியாக அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்ற அவர், அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் யாரோ மர்ம நபர் தனது குழந்தையைக் கடத்தி சென்று விட்டதாக புகார் கூறினார்.

இதையடுத்து ரயில்வே போலீசார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை பரிசோதித்த போது குழந்தையுடன் ஒருவர் கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த நபரை பிடிக்க ரயில்வே போலீசார் தீர்மானித்தனர். அந்த ரயில் அடுத்ததாக ஜான்சி என்ற ஸ்டேஷனில் தான் நிற்கும். ஆனால் அந்த ஸ்டேஷனில் போதிய ரயில்வே போலீசார் இல்லாததால் குற்றவாளி தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதினர்.

இதை தொடர்ந்து அங்கிருந்து 241 கிமீ தொலைவிலுள்ள போபால் ஸ்டேஷனில் ரயிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஜான்சிக்கும் போபாலுக்கும் இடையே 3 ஸ்டாப்புகள் உள்ளன. இந்த ஸ்டாப்புகளில் ரயிலை நிறுத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவல் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் ரயில் சென்றது. இதற்கிடையே போபால் ஸ்டேஷன் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த ரயில் வந்து நின்றதும் குழந்தையுடன் இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது தான் இந்த பரபரப்பு சம்பவத்தில் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டது. தந்தை தான் அந்த குழந்தையைக் கொண்டு சென்றார் எனத் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தான் இந்த கடத்தல் நாடகத்திற்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

More News >>