திருமணத்திற்கு மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து தயாரிப்பாளரை தேடும் போலீஸ்
தெலுங்கில் 'குமாரி 18 +' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. ஏராளமான தெலுங்கு படங்களிலும் ஹோட்டல் மாலினி என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஒரு சினிமா தயாரிப்பு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் யோகேஷ் குமாருடன் மால்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பல முறை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோகேஷ் குமார் நடிகை மால்வியிடம் கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துள்ளார்.யோகேஷ் குமாரிடம் பேசுவதையும் அவர் குறைத்துக்கொண்டார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் நடிகை மால்வி மும்பையில் உள்ள ஒரு கபேயில் இருந்து காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை மறித்த யோகேஷ்குமார், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த யோகேஷ் குமார், மால்வியை கத்தியால் 4 முறை குத்திவிட்டுத் தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த அவர் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மால்வியின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போது யோகேஷ் குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.