காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி பட்டப்பகலில் சுட்டுக் கொலை
காதலிக்க மறுத்த 21 வயதான கல்லூரி மாணவியை வாலிபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா (21). இவர் அங்குள்ள பல்லாப்கர் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்தார். நிகிதாவை அதே பகுதியைச் சேர்ந்த தவ்சீப் என்பவர் தன்னை காதலிக்குமாறு கூறி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரது தொந்தரவு அதிகமானதைத் தொடர்ந்து இதுகுறித்து நிகிதா தன் தந்தையிடம் கூறினார்.
இதையடுத்து கடந்த இரு வருடங்களுக்கு முன் தவ்சீப்புக்கு எதிராக நிகிதாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் நிலையில் வைத்து இரு தரப்புக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது. போலீஸ் நிலையத்திற்கு வந்த தவ்சீப்பின் பெற்றோர், இனி தவ்சீப்பால் பிரச்சினை இருக்காது என எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து நிகிதாவின் தந்தை புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று கல்லூரியில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்காக நிகிதா கல்லூரிக்குச் சென்றிருந்தார். இந்த சமயத்தில் தவ்சீப் தனது நண்பர் ரெஹான் என்பவருடன் வெளியே காரில் காத்துக் கொண்டிருந்தார். தேர்வு முடிந்து வெளியே வந்த நிகிதாவை தவ்சீப் திடீரென கையை பிடித்து இழுத்து காருக்குள் ஏற்ற முயன்றார். ஆனால் அவர் காரில் ஏற மறுத்தார். அவருடன் அவரது தோழி ஒருவரும் இருந்தார். தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அப்போது திடீரென நிகிதா மீது தவ்சீப் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே நிகிதா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். தவ்சீப் உடனடியாக தனது நண்பரை அழைத்துக்கொண்டு காரில் ஏறித் தப்பிச் சென்றார். போலீசார் அங்கு விரைந்து சென்று நிகிதாவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நிகிதாவை சுட்டுக் கொன்ற தவ்சீப்பை பின்னர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பரிதாபாத் - மதுரா தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. நிகிதா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து நிகிதாவின் தந்தை கூறுகையில், 'எனது மகளை தவ்சீப் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தான். இதனால் கடந்த இரு வருடங்களுக்கு முன் அவனுக்கு எதிராக நான் போலீசில் புகார் கொடுத்தேன். பின்னர் இதன் காரணமாக எனது மகளின் பெயர் கெட்டுவிடக் கூடாது எனக் கருதி புகாரை நான் வாபஸ் பெற்று விட்டேன். இப்போது எனது மகளை அவன் கொன்று விட்டான் என்று வேதனையுடன் அவர் தெரிவித்தார்.