பீகார் தேர்தல் விறுவிறுப்பு.. நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களிப்பு.. நிதிஷ்குமார் ஆட்சி தப்புமா?

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, இன்று(அக்.28) முதல் கட்டமாக 71 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போதே பல வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டமாக வந்து காத்திருந்தனர். லகிசாரை என்ற இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதை மாற்றி விட்டு, புதிய இயந்திரம் கொண்டு வந்து வைத்தனர்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. ராம்விலாஸ் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சிராக் பஸ்வான் கட்சியை நடத்தி வருகிறார். அவர் கூட்டணியை விட்டு விலகி விட்டாலும், பாஜகவைத் தொடர்ந்து ஆதரிக்கிறார்.அவரது லோக்ஜனசக்தி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. மேலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தைக் கடுமையாகத் தாக்கி, சிராஜ்பஸ்வான் பிரச்சாரம் செய்தார். இது ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே, லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மெகா கூட்டணியை உருவாக்கிப் போட்டியிடுகின்றன. அந்த கூட்டணி, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

More News >>