சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்களுக்கு விருப்பம் இல்லையாம்.. தனியார் அமைப்பு சர்வேயில் தகவல்..
நாடு முழுவதும் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய சர்வேயில், அடுத்த 2 மாதங்களுக்கு சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று பாதித்தது. இதற்கிடையே, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இதன்பின்னர், படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்படவில்லை.டெல்லி, குஜராத், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம் உள்படப் பல மாநிலங்களில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், கொரோனா அதிகமாகப் பாதித்த மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா, சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. நவம்பரில் இவற்றைத் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, லோக்கர் சர்கிள்ஸ் என்ற தனியார் அமைப்பு நாடு முழுவதும் மக்களிடம் சினிமா தியேட்டர் திறப்பு பற்றி கருத்துக் கணிப்பு நடத்தியது. 8,274 பேரிடம் மட்டுமே சர்வே நடத்தப்பட்டது என்றாலும், தியேட்டர் திறக்கப்படாத மாநிலங்களில்தான் அதிகமானோரிடம் கருத்துக் கேட்கப்பட்டிருக்கிறது.இதில், 74 சதவிகித மக்கள், கொரோனா அச்சம் காரணமாக அடுத்த 2 மாதங்களுக்கு தியேட்டர் பக்கம் போக மாட்டோம் என்று கருத்து கூறியிருக்கிறார்கள். 7 சதவிகிதம் பேர் மட்டுமே தியேட்டர் திறந்தால் படம் பார்க்கச் செல்வோம் என்று கூறியுள்ளனர். அதிலும் 4 சதவிகிதம் பேர், புதிய சினிமா திரையிட்டால் மட்டுமே செல்வோம் என்று கூறியிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி, 17 சதவிகிதம் பேர் தாங்கள் எப்போதுமே தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில்லை என்றும் வீடுகளிலேயே பார்ப்போம் என்றும் கூறியுள்ளனர்.