பீகார் சட்டசபை தேர்தல்.. 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வம்..
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, முதல் கட்டத் தேர்தல் நடக்கும் 71 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 33 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பல இடங்களில் மக்கள் அதிகாலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். லகிசாரை உள்பட சில வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால், மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
இதற்கிடையே, அவுரங்கபாத் மாவட்டத்தில் திப்ரா பகுதியில் 2 வெடிக்காத குண்டுகளை சி.ஆர்.பி.எப் போலீசார் கண்டுபிடித்தனர். அவற்றைப் பத்திரமாக எடுத்துச் சென்று சக்தியிழக்க வைத்தனர். பிரச்சனைக்குரிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பீகார் வாக்காளர்கள் அனைவரும் கோவிட்19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வாக்களிக்க வேண்டுமென்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தேர்தல் என்னும் ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில், பீகார் மக்கள் ஒரு புதிய மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.