பிரபல இயக்குனருக்கு கொலை மிரட்டல்.. விஜய் சேதுபதியை விலக சொன்னதால் பரபரப்பு...!
பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி,நடிகர் விஜய் சேதுபதியைத் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தியவர் தொடர்ந்து நீர்பறவை, தர்ம துரை, கண்ணே கண்மணியே போன்ற பல படங்களை இயக்கியதுடன் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் என்ற படம் இயக்கி வருகிறார்.இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை கதையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய் சேதுபதி.
அப்படத்தின் அறிவிப்பு துபாயில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் போது முத்தையா முரளிதரன் வெளியிட்டார். விஜய் சேதுபதியும் இதில் கலந்து கொண்டார். ஆனால் அது சர்ச்சையாக உருவெடுத்தது. தமிழ் ஆர்வலர்கள். இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைர முத்து, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்தது.
இதையடுத்து முத்தையா முரளிதரனே தனது வாழ்க்கை படத்திலிருந்து விலகிக்கொள்ளும்படி விஜய் சேதுபதியைக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து நன்றி வணக்கம் சொல்லி விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகினார்.இந்நிலையில் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம் என குறிப்பிட்டு மெசேஜ் பகிர்ந்துள்ளார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், இது நான் எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் சொல்லவில்லை. நான் எந்த கட்சியையும் சேராதவன். தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததால் எனக்கு இப்படி நிலை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.பின்னர் அவர் அளித்த பேட்டியில்,விஜய் சேதுபதியை 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன், விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி எனக்கு மிரட்டல்கள். வருகின்றன. வாட்ஸ் அப் மூலம் நள்ளிரவில் அச்சுறுத்தல்கள் வருகின்றன. மிரட்டல்கள் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன் என்று சீனு ராமசாமி கூறி உள்ளார்.