கேரளாவில் மது பார்கள் விரைவில் திறப்பு
கேரளாவில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மது பார்களையும் விரைவில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் அரசு மதுபான விற்பனைக் கழகம் மூலம் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள் 350க்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
700க்கும் மேற்பட்ட மது பார்களும் கேரளாவில் உள்ளன. கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் கேரளா முழுவதும் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதே போல பார்களும் மூடப்பட்டன. மது விற்பனை மூலம் தான் கேரள அரசுக்குப் பெருமளவு வருமானம் கிடைக்கிறது. மதுக் கடைகள் மூடப்பட்ட நிலையில் அரசின் வருமானம் பெருமளவு குறைந்தது.
ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.மது விற்பனை செய்வதற்கு ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மது வாங்க முடியும். மதுக்கடைகளில் நெரிசலைத் தவிர்ப்பதற்காக மது பார்களிலும் மது விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பார்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் மது பார்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவிலும் பார்களை திறக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
பார் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு விரைவில் மது பார்களை திறக்க தீர்மானித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பார்களை திறக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கள்ளுக் கடைகளும் உள்ளன. இவையும் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.